செய்திகள்
எரிந்த நிலையில் நிற்கும் கார்

பீதியை கிளப்பும் புகைப்படங்கள் - இனி கார்களில் சானிடைசர் பாட்டிலை வைக்க கூடாதா?

Published On 2020-05-28 04:38 GMT   |   Update On 2020-05-28 04:38 GMT
சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவல்களில் காரினுள் சானிடைசர் பாட்டில் வைத்தால் கார் தீப்பிட்டித்து எரிந்து விடும் என கூறப்படுகிறது.



கொரோனா உயிரிழப்புகள் ஒருபக்கம் அதிகரித்து கொண்டே இருக்கும் நிலையில், சுட்டெருக்கும் வெயிலில் கொரோனா பரவாது என்ற நம்பிக்கை சுக்குநூறாக உடைந்துவிட்டது. முகக்கவசங்கள் மற்றும் சானிடைசர்கள் மக்களின் அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இடம்பிடித்து கொண்டன.

தற்சமயம் மக்கள் செல்லும் இடங்களுக்கு எல்லாம் சானிடைசரை கொண்டு செல்ல வழக்கப்படுத்தி கொண்டனர். இந்நிலையில், சானிடைசர் பாட்டில் காரை தீப்பிடிக்க செய்து எரித்து விடும் என கூறும் தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இவற்றுடன் முழுமையாக எரிந்து போன கார்களின் புகைப்படங்களும் இணைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், டெல்லியில் கார் ஒன்று தீப்பிடித்து எரிந்து அதன் ஓட்டுனர் உயிரிழந்த சம்பவம் பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வைரல் பதிவுகளிடையே இந்த சம்பவத்துக்கும் சானிடைசர் பயன்பாடு தான் காரணம் என நெட்டிசன்கள் நம்புகின்றனர்.



உண்மையில் சுட்டெரிக்கும் வெயிலில் காரினுள் வைக்கப்பட்ட சானிடைசர் பாட்டில் காரை தீப்பிடிக்க செய்யுமா என ஆய்வு செய்த போது, நெட்டிசன்கள் நம்பிக்கைக்கு முரணான பதில் கிடைத்தது. சானிடைசர் பாட்டில் தானாக தீப்பிடித்து எரிவது முற்றிலும் சாத்தியமில்லாதது என தெரியவந்துள்ளது.

சானிடைசர் பாட்டில்கள் தானாக தீப்பிடித்து எரிய 363 டிகிரி செல்சியஸ் வெப்பம் தேவைப்படும். இத்தகைய வெப்பம் டின், தகரம் போன்றவற்றை உருக்கிவிடும். இத்தனை அளவு வெப்பம் ஏற்படும் போது, சானிடைசர்களுக்கு முன் காரில் உள்ள மற்ற பாகங்களே தீப்பிடித்து எரிய துவங்கிவிடும்.

அந்த வகையில் கார்களில் சானிடைசர் வைத்தால் கார் எரிந்துவிடும் என கூறும் பதிவுகளில் துளியும் உண்மையில்லை என உறுதியாகிவிட்டது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
Tags:    

Similar News