செய்திகள்
கொரோனா பிரச்சினையால் வேலை இழக்கும் ஐ.டி. ஊழியர்கள்

கொரோனா பிரச்சினையால் வேலை இழக்கும் ஐ.டி. ஊழியர்கள்

Published On 2020-05-28 03:06 GMT   |   Update On 2020-05-28 03:06 GMT
கொரோனா நெருக்கடி காரணமாக மகாராஷ்டிராவில் உள்ள ஐ.டி. நிறுவனங்கள் ஆட்குறைப்பு மற்றும் சம்பள குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
மும்பை :

மகாராஷ்டிராவில் கண்ணுக்கு தெரியாத கொரோனா வைரஸ் கோர தாண்டவமாடி வருகிறது. நாட்டின் மற்ற மாநிலங்களை விட இங்கு தான் இந்த நோயின் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு மிக அதிகம். கொரோனா நெருக்கடி காரணமாக மாநிலத்தில் உள்ள ஐ.டி. நிறுவனங்கள் ஆட்குறைப்பு மற்றும் சம்பள குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த பிரச்சினையில் தலையிட கோரி ஐ.டி. ஊழியர்களின் உரிமைகளுக்காக செயல்படும் தேசிய தகவல் தொழில்நுட்ப செனட் என்ற அமைப்பு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் எழுதி உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

மகாராஷ்டிரா முழுவதும் பல ஐ.டி., ஐ.டி.எஸ், பி.பி.ஓ., கே.பி.ஓ. நிறுவனங்கள் எந்தவொரு நியாயமான காரணமும் இல்லாமல் ஊழியர்களை பணியில் இருந்து நீக்கி வருகின்றன.

மேலும் சம்பள குறைப்பு மற்றும் ஊழியர்களை கட்டாய விடுப்பில் அனுப்பும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றன. கொரோனா பிரச்சினைக்கு ஊழியர்கள் எந்தவகையிலும் பொறுப்பாக மாட்டார்கள். ஆனால் நிறுவன உரிமையாளர்கள் கடுமையான மற்றும் இணக்கமற்ற முடிவுகளை எடுத்து வருகின்றனர்.



தனியார் நிறுவனங்களுக்கு கிடுக்கிப்பிடி உத்தரவுகள் பிறப்பிக்கப்படாததால் தினசரி ஆயிரக்கணக்கான ஊழியர்கள் தங்களது பணியையும், வருமானத்தையும் இழந்து வருகிறார்கள். இது மராட்டிய அரசின் விதிமுறைகளை முழுமையாக மீறும் செயலாகும்.

இதுபோன்ற சோதனை காலங்களில் நாட்டில் ஊழியர்களின் பணியை பாதுகாக்க நிறுவனங்களுக்கு அரசு தேவையான உத்தரவு மற்றும் வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்.

மகாராஷ்டிராவில் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட ஐ.டி., ஐ.டி.எஸ், பி.பி.ஓ., கே.பி.ஓ. நிறுவனங்களின் பணிபுரியும் ஊழியர்களின் பணி, வாழ்க்கை மற்றும் குடும்பத்தை பாதுகாக்க இந்த பிரச்சினையில் மாநில அரசு உடனடியாக தலையிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்தநிலையில், 68 ஆயிரம் ஊழியர்கள் சட்டவிரோமாக பணி நீக்கம், ஊதியம் குறைப்பு, கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தது, கட்டாய விடுப்பில் அனுப்பியது தொடர்பாக தொழிலாளர் ஆணையர்கள் மற்றும் மாவட்ட மாஜிஸ்திரேட்களிடம் மனு தாக்கல் செய்துள்ளதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
Tags:    

Similar News