செய்திகள்
ரெயில் பயணத்துக்கு தயாரான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்

3,276 சிறப்பு ரெயில்கள் மூலம் 42 லட்சம் வெளிமாநில தொழிலாளர்கள் பயணம்

Published On 2020-05-27 03:17 GMT   |   Update On 2020-05-27 03:17 GMT
இதுவரை 3,276 சிறப்பு ரெயில்கள் மூலம் 42 லட்சம் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு சென்று உள்ளனர்.
புதுடெல்லி:

புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களுடைய சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பதற்காக ரெயில்வே நிர்வாகம் கடந்த 1-ந் தேதி முதல் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ‘சராமிக்’ சிறப்பு ரெயில்களை இயக்கி வருகிறது. தொழிலாளர்களின் பயண கட்டணத்தில் 85 சதவீதத்தை ரெயில்வே ஏற்றுக்கொள்கிறது. மீதி 15 சதவீதத்தை மாநிலங்கள் செலுத்துகின்றன.

இதுவரை 3,276 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு உள்ளன. இதுவரை இந்த ரெயில்கள் மூலம் 42 லட்சம் தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு போய்ச் சேர்ந்து இருக்கிறார்கள்.

இதில் அதிக சிறப்பு ரெயில்கள் புறப்பட்டு சென்ற 5 மாநிலங்களின் பட்டியலில் குஜராத் முதல் இடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தில் இருந்து 897 ரெயில்கள் இயக்கப்பட்டு உள்ளன. அதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிராவில் இருந்து 590 ரெயில்களும், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து 358 ரெயில்களும், உத்தரபிரதேசத்தில் இருந்து 232 ரெயில்களும், டெல்லியில் இருந்து 200 ரெயில்களும் இயக்கப்பட்டு இருக்கின்றன.

அதிக சிறப்பு ரெயில்கள் போய்ச்சேர்ந்த 5 மாநிலங்களில் உத்தரபிரதேசம் முதல் இடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தில் இருந்து 1,428 ரெயில்கள் இயக்கப்பட்டு உள்ளது. அதற்கு அடுத்தபடியாக பீகாருக்கு 1,178 ரெயில்களும், ஜார்கண்டுக்கு 164 ரெயில்களும், ஒடிசாவுக்கு 128 ரெயில்களும், மத்தியபிரதேசத்துக்கு 120 ரெயில்களும் இயக்கப்பட்டு இருக்கின்றன.

மேற்கண்ட தகவல்களை ரெயில்வே நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதற்கு முன்பே புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் ஏராளமானோர் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு நடந்தும், சைக்கிளிலும் மற்றும் லாரி போன்ற வாகனங்களிலும் செல்ல தொடங்கினார்கள்.

இதில் சில இடங்களில் தொழிலாளர்கள் விபத்துகளில் சிக்கி உயிரிழந்த சம்பவங்கள் நடைபெற்றன. சிறப்பு ரெயில்களை இயக்க தொடங்கிய பிறகு தொழிலாளர்கள் அவ்வாறு செல்வது குறைந்தது.
Tags:    

Similar News