செய்திகள்
கொரோனா வைரஸ்

கேரளாவில் கொரோனா பாதித்த கைதியிடம் விசாரணை - நீதிபதி, இன்ஸ்பெக்டர் தனிமைபடுத்தப்பட்டனர்

Published On 2020-05-26 10:29 GMT   |   Update On 2020-05-26 10:29 GMT
கேரளாவில் கைதிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதை தொடர்ந்து அவர்களை விசாரித்த நீதிபதிகள், மற்றும் இன்ஸ்பெக்டர் ஆகியோர் தனிமைபடுத்தப்பட்டனர்.
திருவனந்தபுரம்:

வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருவோரால் கேரளாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

கொரோனா சமூக பரவலாக மாறாமல் இருக்க மாநில சுகாதார துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். இதற்காக கொரோனா பாதித்தவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்த அனைவரும் உடனடியாக தனிமைபடுத்தப்பட்டு வருகிறார்கள்.



வெளிநாடுகளில் இருந்து வருவோர் கண்டிப்பாக 14 நாள் தனிமையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இவை முறையாக கடைபிடிக்கப்படுகிறதா? என்பதை சுகாதார துறையினர் கண்காணித்து வருகிறார்கள்.

திருவனந்தபுரம் வெஞ்சாறுமூடு பகுதியை சேர்ந்த ஒருவரை போலீசார் மது கடத்தியதாக கைது செய்தனர். அவருக்கு ரத்த மாதிரி எடுக்கப்பட்ட பின்னர் அவரிடம் இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தினார். பின்னர் அவர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

இதுபோல கண்ணூரில் ஒருவர் ஒரு வழக்கு தொடர்பாக கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை விசாரித்த நீதிபதி, ஜெயிலில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். கைதிகள் இருவரும் ஜெயிலில் அடைக்கப்பட்ட பின்னர் அவர்களின் ரத்த மாதிரி சோதனை முடிவுகள் வந்தது. இதில் இருவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. உடனடியாக அவர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டனர்.

கைதிகள் இருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானதை தொடர்ந்து அவர்களை விசாரித்த 3 நீதிபதிகள் மற்றும் இன்ஸ்பெக்டர் ஆகியோரை உடனடியாக தனிமையில் செல்லும்படி சுகாதார துறையினர் அறிவுறுத்தினர்.

மேலும் கைதிகள் அடைக்கப்பட்ட ஜெயிலில் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், ஜெயில் ஊழியர்கள் யார்-யார் என்பதை கணக்கெடுத்து அவர்களிடமும் ரத்த பரிசோதனை செய்யப்பட்டது.

இதற்கிடையே கைதியை விசாரித்த இன்ஸ்பெக்டர் ஒருவர் வாமனபுரம் எம்.எல்.ஏ. முரளி பங்கேற்ற கூட்டத்தில் கலந்து கொண்டார். இதில் மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாறுமூடும் கலந்து கொண்டார். இதனால் அவர்களையும், அவர்களோடு தொடர்பில் இருந்த சுமார் 100 பேரை 14 நாட்கள் வீடுகளிலேயே தனிமையில் இருக்க சுகாதார அதிகாரிகள் அறிவுரை வழங்கி உள்ளனர்.
Tags:    

Similar News