செய்திகள்
கொல்கத்தா விமான நிலையம்

மேற்கு வங்காளத்தில் நாளை மறுநாள் உள்நாட்டு விமான சேவை துவக்கம்- பயணிகள் பின்பற்றவேண்டிய நடைமுறைகள்

Published On 2020-05-26 07:41 GMT   |   Update On 2020-05-26 07:41 GMT
மேற்கு வங்காளத்தில் நாளை மறுநாள் உள்நாட்டு விமான சேவை தொடங்க உள்ள நிலையில், பயணிகள் பின்பற்றவேண்டிய நடைமுறைகள் குறித்து மாநில அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
கொல்கத்தா:

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உள்நாட்டு விமான சேவை, 2 மாதங்களுக்கு பிறகு நேற்று  தொடங்கியது. ஆந்திரா மற்றும் அம்பன் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் விமான சேவையை தொடங்கவில்லை. இதில், ஆந்திராவில் இன்று விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. மேற்கு வங்காளத்தில் 28ம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவையை தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக மேற்கு வங்காள விமான நிலையங்களில் தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில், விமான பயணங்களுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி மேற்கு வங்காளத்திற்கு வரும் பயணிகள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் வருமாறு:-

மேற்கு வங்காளம் வரும் பயணிகள் அனைவரும், தங்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா தொற்று இல்லை என்று கூறி சுய உறுதிமொழி படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

பயணிகள் விமான நிலையத்திற்கு வந்தபின்னர் சுகாதார பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். நோய் அறிகுறியற்ற பயணிகள் 14 நாட்களுக்கு வீட்டில் சுயமாக உடல்நிலையை கண்காணிக்க வேண்டும் என்ற ஆலோசனையுடன் வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால், உள்ளூர் மருத்துவ அதிகாரி அல்லது மாநில அழைப்பு மையத்திற்கு தெரியப்படுத்த வேண்டும்.

விமான நிலையத்திற்கு வந்ததும் அறிகுறி ஏற்பட்ட பயணிகளின் மாதிரிகளை பரிசோதிக்க அருகிலுள்ள சுகாதார மையத்திற்கு கொண்டு செல்லப்படுவார்கள்.

மிதமான அல்லது கடுமையான அறிகுறிகளைக் கொண்ட பயணிகள், மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும்.

வழக்கமான சுத்திகரிப்பு மற்றும் கிருமிநாசினி தெளிப்பு போன்ற பணிகள் விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும். விமான நிலையத்தின் வெவ்வேறு பகுதிகளில், கிருமிநாசினிகள் போதுமான அளவு வைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News