செய்திகள்
ரபேல் விமானம் - கோப்புப்படம்

இந்தியாவுக்கு ரபேல் விமானங்கள் தாமதம் இன்றி வழங்கப்படும் - பிரான்சு தூதர் உறுதி

Published On 2020-05-25 08:45 GMT   |   Update On 2020-05-25 08:45 GMT
இந்தியாவுக்கு ரபேல் போர் விமானங்கள் தாமதம் எதுவும் இன்றி உரிய நேரத்தில் வழங்கப்படும் என்று பிரான்சு நாட்டு தூதர் இமானுவேல் லெனைன் தெரிவித்து உள்ளார்.
புதுடெல்லி:

கடந்த 2016 செப்டம்பர் மாதத்தில் ரூ.58 ஆயிரம் கோடி செலவில் 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவது தொடர்பாக இந்தியா- பிரான்சு அரசுகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. கடந்த ஆண்டு அக்டோபர் 8-ந்தேதி, முதலாவது ரபேல் போர் விமானத்தை பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் பிரான்சு அரசிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.

இந்த 36 ரபேல் ஜெட் விமானங்களில் 30 போர் விமானங்கள் மற்றும் 6 பயிற்சி விமானங்கள் அடங்கும். இந்த ரபேல் போர் விமானங்களை இயக்குவது, பராமரிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை இந்திய விமானப்படை ஏற்கனவே தொடங்கி உள்ளது. இதற்கான தளம், பராமரிப்பு ஆகியவற்றை ஏற்பாடு செய்வது தொடர்பாக ஏற்கனவே ரூ.400 கோடி செலவழிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.



தற்போது பிரான்சு நாட்டில் கொரோனா நோய்த்தொற்று பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த நாட்டில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கி உள்ளது. எனவே இந்தியாவுக்கு ரபேல் விமானங்களை அனுப்பி வைப்பதில் தாமதம் ஏற்படும் என்ற ஐயப்பாடு எழுப்பப்பட்டது.

இந்த நிலையில் பிரான்சு நாட்டின் இந்திய தூதர் இமானுவேல் லெனைன் நேற்று அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது:-

ரபேல் விமானங்கள் விற்பதற்கான ஒப்பந்தத்தில் உள்ள நிபந்தனைகளை பிரான்சு அரசாங்கம் இதுவரை மதித்து நடந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாத இறுதியில் புதிய ரபேல் போர் விமானம் ஒன்று இந்திய விமானப்படை வசம் பிரான்சு அரசாங்கம் ஒப்படைத்துள்ளது.

இந்திய விமானப்படையிடம் மேலும் 4 போர் விமானங்களை கூடிய விரைவில் அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. எனவே, ஒப்பந்தப்படி விமானங்களை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டிய குறிப்பிட்ட கால அவகாசம் தொடர்பான நிபந்தனை எந்த வகையிலும் மீற மாட்டாது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News