செய்திகள்
லடாக் பகுதி இந்திய, சீன வீரர்கள் - கோப்புப்படம்

லடாக் எல்லையில் இந்திய வீரர்களை சிறைபிடித்து சீன ராணுவம் அத்துமீறல்

Published On 2020-05-24 10:25 GMT   |   Update On 2020-05-24 10:25 GMT
லடாக் எல்லையில் இந்திய வீரர்களை சீன ராணுவம் சிறைபிடித்ததை தொடர்ந்து அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.
புதுடெல்லி:

லடாக் மாநிலத்தின் வடக்கு பகுதியில் பங்காங் டசோ ஏரி, டெம்சாக், கல்வான் ஏரி பள்ளத்தாக்கு ஆகிய பகுதிகள் உள்ளன.

1962 சீனப்போரின் போது இதையொட்டி உள்ள இந்திய பகுதியை சீனா கைப்பற்றிக் கொண்டது. அதில் இருந்து இந்த பகுதியில் எல்லை பிரச்சினை இருந்து வருகிறது.

இந்த 3 பகுதிகளும் இந்தியாவுக்கு சொந்தமானதாகும். ஆனால், இங்கு சீனா அடிக்கடி அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த 5-ந்தேதி கல்வான் ஆறு பள்ளத்தாக்கு பகுதியில் சீனா கூடாரங்களை அமைத்தது. இதற்கு இந்திய ராணுவம் எதிர்ப்பு தெரிவித்தது.

அப்போது இரு தரப்புக்கும் மோதல் ஏற்பட்டு வீரர்கள் காயம் அடைந்தனர். மேலும் பங்காங் டசோ ஏரி, டெம்சாக் பகுதியிலும் இப்போது சீனா கூடாரங்களை அமைத்துள்ளது.

இதனால் இந்திய படைகள் கூடுதலாக அங்கு குவிக்கப்பட்டன.

இந்த நிலையில் பங்காங் ஏரி பகுதியில் இந்திய ராணுவத்தினர் மற்றும் இந்திய திபெத் எல்லை போலீஸ் படையினர் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது இந்திய படையினர் சிலரை சீன ராணுவம் சிறை பிடித்தது. அவர்களுடைய ஆயுதங்களையும் கைப்பற்றியது. இது சம்பந்தமாக பின்னர் எல்லை பகுதி தளபதிகளுக்குள் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு வீரர்களை அவர்கள் விடுவித்தனர்.

இதன் பிறகு தொடர்ந்து அந்த ஏரி பகுதியில் படகுகளில் இந்திய பகுதிகளுக்கு வந்து சீன ராணுவம் அத்து மீறலில் ஈடுபட்டு வருகிறது.

எனவே, அங்கு இந்தியா தொடர்ந்து படைகளை குவித்து வருகிறது. சீனாவும் படைகளை குவிக்கிறது. இதனால் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.

அங்கு நடந்த சம்பவம் தொடர்பாக ராணுவம் தரப்பில் பிரதமர் அலுவலகத்துக்கு விரிவான அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இதுகுறித்து தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.

அந்த பகுதியில் உள்ளூர் மக்கள் வசதிக்காக இந்தியா சமீப காலமாக சாலைகளை அமைத்து வருகிறது. இதற்கு சீனா ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்தது.

இதன் தொடர்ச்சியாக அத்துமீறல்கள் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளன.
Tags:    

Similar News