செய்திகள்
தரிசன டிக்கெட் முன்பதிவு செய்யும் இணையதளத்தின் முகப்பு பக்கம்

திருப்பதி தரிசன டிக்கெட் இணையதள முகவரி மாற்றம்- அனுமதி பெற்ற பின்பே சென்னையில் லட்டு விற்பனை

Published On 2020-05-23 10:15 GMT   |   Update On 2020-05-23 10:15 GMT
திருமலை திருப்பதி தேவஸ்தானம், பக்தர்கள் ஆன்லைன் மூலம் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்யும் இணையதள முகவரியை மாற்றி உள்ளது.
திருப்பதி:

திருப்பதி கோவிலில் தரிசனம் ரத்து செய்யப்பட்டு 64 நாட்கள் ஆகின்றன. ஏழுமலையானை நேரில் தரிசிக்க முடியாத போதிலும் பக்தர்கள் பலர் இ-உண்டியல் காணிக்கைகளை செலுத்தி வருகின்றனர்.

அவர்களின் கோரிக்கையை ஏற்று ஆந்திராவின் பல பகுதிகளிலும் லட்டு பிரசாதத்தை விற்பனை செய்ய தேவஸ்தானம் முன் வந்துள்ளது. மாநிலத்தில் உள்ள 13 தேவஸ்தான மாவட்ட மையங்களில் லட்டு விற்பனை வரும் 25-ந் தேதி தொடங்க உள்ளது.

பொது முடக்கம் காரணமாக லட்டு விலையை ரூ.50-ல் இருந்து ரூ.25 ஆக தேவஸ்தானம் குறைத்துள்ளது. ஏழுமலையான் தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படும் வரை இந்த விலை குறைப்பு அமலில் இருக்கும். லட்டுகளை மொத்தமாக ஆயிரத்துக்கும் மேல் வாங்கி மற்றவர்களுக்கு அளிக்க நினைக்கும் பக்தர்கள் தங்கள் பெயர், வயது, முகவரி, செல்போன் எண் உள்ளிட்ட விவரங்களை 5 நாள்களுக்கு முன்பாக தேவஸ்தானத்துக்கு tmlbulkladdus@gmail.com என்ற மூலம் மின்னஞ்சல் அனுப்ப வேண்டும்.

அவ்வாறு பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு திருப்பதியில் உள்ள தேவஸ்தான அலுவலக கவுன்ட்டரிலோ அல்லது அவர்கள் அருகில் உள்ள தேவஸ்தான தகவல் மையங்கள் மூலமாகவோ லட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.

பெரிய லட்டு விலையும் ரூ.200-ல் இருந்து ரூ.100 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

லட்டு வாங்க வரும் பக்தர்கள் கண்டிப்பாக சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

அந்தந்த மாநிலத்திடம் இருந்து ஒப்புதல் பெறப்பட்ட பின் சென்னை, ஹைதராபாத் மற்றும் பெங்களூரில் லட்டு விற்பனை தொடங்கப்படும். அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

ஏழுமலையான் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்ய தேவஸ்தானம் https://ttdsevaonline.com என்ற இணையதளத்தை உருவாக்கியது. இந்த இணையதளம் வாயிலாக பக்தர்கள் ஏழுமலையான் சிறப்பு விரைவு தரிசனம், ஆர்ஜித சேவா ஸ்ரீவாணி அறக்கட்டளை நன் கொடையாளர்களுக்கான தரிசனம், வாடகை அறைகள் உள்ளிட்டவற்றை முன்பதிவு செய்து வந்தனர்.

இந்நிலையில் நடைமுறையில் உள்ள இந்த இணையதளத்தின் முகவரியை தேவஸ்தானம் மாற்றியுள்ளது. அதன்படி பக்தர்கள் இனி https:/tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தில் தங்களின் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். இன்று முதல் இந்த இணையதளம் செயல்பட தொடங்கும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News