செய்திகள்
மத்திய நேரடி வரிகள் வாரியம்

இந்த நிதியாண்டில் இதுவரை ரூ.26,242 கோடி வரி ரீபண்ட் வழங்கிய வரிகள் வாரியம்

Published On 2020-05-22 09:50 GMT   |   Update On 2020-05-22 09:50 GMT
இந்த நிதியாண்டில் ஏப்ரல் 1 தேதி முதல் மே 21ம் தேதி வரை ரூ.26,242 கோடி அளவுக்கு வரி ரீபண்ட் வழங்கப்பட்டிருப்பதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள தனிநபர்கள், வர்த்தகர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் நலனை கவனத்தில் கொண்டு, வருமான வரி செலுத்துவோருக்கு ரீபண்ட் பணம், ரூ.5 லட்சம் வரை நிலுவை இருப்பவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. வரி செலுத்துபவரின் வங்கிக் கணக்கில் இந்தத் தொகை நேரடியாக செலுத்தப்படுகிறது.

அவ்வகையில் ஏப்ரல் 1ம் தேதி முதல் மே 21ம் தேதி வரையில் 16,84,298 பேருக்கு ரூ.26,242 கோடி அளவுக்கு பணம் திருப்பித் தரப்பட்டிருப்பதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது. இதேபோல் 1,02,392 வரி கணக்குகளுக்கு கார்ப்பரேட் வரி ரீபண்ட் ரூ.11,610 கோடி அளவுக்கு திருப்பி செலுத்தப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

மே 16 தேதி முடிவடைந்த வாரத்தில் மட்டும் 37,531 நபர்களுக்கு ரூ.2,050.61 கோடி வரி ரீபண்ட் மற்றும் 2,878 கார்ப்பரேட் வரி கணக்குகளுக்கு ரூ.867.62 கோடி வரி ரீபண்ட் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் சுயசார்பு இந்தியா திட்டம் தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த பின்னர், அனைத்து ரீபண்டுகளையும் வழங்கும் நடைமுறைகள் விரைவுபடுத்தப்பட்டிருப்பதாகவும் வரிகள் வாரியம் குறிப்பிட்டுள்ளது.
Tags:    

Similar News