செய்திகள்
அஜித்பவார்

பாஜக போராட்டம் நடத்துவது கொரோனாவுக்கு எதிராக போராடுபவர்களை அவமதிக்கும் செயல்: அஜித்பவார்

Published On 2020-05-22 03:11 GMT   |   Update On 2020-05-22 03:11 GMT
அரசுக்கு எதிராக பாரதீய ஜனதா போராட்டம் நடத்துவது கொரோனாவுக்கு எதிராக போராடுபவர்களை அவமதிக்கும் செயல் என துணை முதல்-மந்திரி அஜித்பவார் தாக்கினார்.
மும்பை :

மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்தநிலையில் மகாராஷ்டிரா பாரதீய ஜனதா தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி அரசாங்கம் கொரோனா வைரசை தடுப்பதில் தோல்வி அடைந்துவிட்டது. எனவே அரசை கண்டித்து இன்று (வெள்ளிக்கிழமை) மாநிலம் முழுவதும் ‘மராட்டியத்தை காப்பாற்றுங்கள்’ (மகாராஷ்டிரா பச்சாவ்) போராட்டம் நடத்தப்படும். இதன்படி காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை கருப்பு பேட்ஜ் அணிந்து, கருப்பு முககவசங்களை அணிந்து கொண்டும், கண்டன வாசகங்கள் அடங்கிய கருப்பு பதாகைகளுடன் அவரவர் வீட்டு முன் அரசுக்கு எதிராக போராட்டம் நடக்கும் என கூறியிருந்தார்.

இது குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், துணை முதல்-மந்திரியுமான அஜித் பவார் கூறியதாவது:-

இதுபோன்ற ஒரு சூழ்நிலையில் போராட்டத்தில் ஈடுபடுவது அறிவார்ந்த செயல் இல்லை. டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதாரத் துறை பணியாளர்கள், துப்புரவு தொழிலாளர்கள், போலீசார் மற்றும் நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமகனும் வைரசை எதிர்த்து போராடி வருகின்றனர்.

அவர்களுக்கு ஊக்கம் அளித்து மேலும் வலிமை ஊட்டுவதற்கு பதிலாக போராட்டத்தில் இறங்குவது என்பது கொரோனாவுக்கு எதிராக போராடிவரும் வீரர்களை அவமதிக்கும் செயலன்றி வேறில்லை. இதுபோன்ற தேவையற்ற எதிர்ப்பு போராட்டங்கள் மராட்டிய பாரதீய ஜனதாவுக்கு எந்த வகையிலும் பலன் அளிக்கப் போவதில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைப்போல மாநில காங்கிரஸ் தலைவரும், மந்திரியுமான பாலசாகேப் தோரட் கூறுகையில், “பாரதீய ஜனதா நடத்துவது மகாராஷ்டிராவை காப்பாற்றுங்கள் போராட்டம் அல்ல, இது பாரதீய ஜனதாவை காப்பாற்றுங்கள் போராட்டம்.

நெருக்கடியான சூழ்நிலையிலும் பாரதீய ஜனதா தலைவர்களால் எப்படி அரசியல் குறித்து சிந்திக்க முடிகிறது? இதுபோன்ற நடவடிக்கைகள் மராட்டியத்திற்கு இழைக்கப்படும் துரோகம்” என்றார்.
Tags:    

Similar News