செய்திகள்
சோனியா காந்தி

பிரதமர் மோடியை விமர்சித்து டுவிட்டரில் கருத்து - சோனியா காந்தி மீது வழக்கு

Published On 2020-05-21 22:55 GMT   |   Update On 2020-05-21 22:55 GMT
பிரதமர் நிவாரண நிதியை தவறாக பயன்படுத்துகிறார் என டுவிட்டரில் பதிவிட்ட சோனியா காந்திக்கு எதிராக கர்நாடகத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
பெங்களூரு:

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக பிரதமர் மோடி மக்களிடம் நிதியுதவி அளிக்கும்படி கேட்டார். 
அதன் அடிப்படையில் பி எம் கேர்ஸ் பண்ட் உருவாக்கப்பட்டது.

இந்நிலையில், பிரதமர் நிவாரண நிதியை தவறாக பயன்படுத்துகிறார் என டுவிட்டரில் பதிவிட்ட காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு எதிராக கர்நாடகத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, கர்நாடகாவின் சிவமொக்கா மாவட்டம் சாகர் போலீஸ் நிலையத்தில் கே.வி.பிரவீன்குமார் என்பவர் ஒரு புகாரை அளித்தார்.

அந்தப் புகாரில், அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி தனது டுவிட்டரில் கொரோனாவுக்கு எதிராக போராட அமைக்கப்பட்ட பிரதமர் கேர் நிதியகத்திற்கு வந்த நிதி தவறாக பயன்படுத்தப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். இது பிரதமர் மோடியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் முயற்சி. இதுகுறித்து அடிப்படை ஆதாரமற்ற தவறான தகவலை வெளியிட்ட சோனியா காந்தி மீது வழக்குப்பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் சாகர் போலீசார் சோனியா காந்தி மீது இந்திய தண்டனை சட்டம் 153, 505(1) (பி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். அந்த சட்ட பிரிவுகள், ஒரு குறிப்பிட்ட பிரிவினர் அல்லது சமூகத்தினருக்கு எதிராக மக்களை தூண்டிவிடுவதை குறிப்பிடுகிறது.

சோனியா காந்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டித்துள்ளது. சோனியா காந்தி மீது போடப்பட்ட எப் ஐ ஆரை திரும்பப் பெற வேண்டும் என அக்கட்சியின் சித்த ராமையா மற்றும் டி.கே.சிவகுமார் ஆகியோர் முதல் மந்திரி எடியூரப்பாவை வலியுறுத்தி உள்ளனர்.
Tags:    

Similar News