செய்திகள்
ராஜினாமா செய்து ஊர் திரும்பிய செவிலியர்கள்

எங்கள் மீது எச்சில் துப்பினார்கள்... ராஜினாமா செய்து மணிப்பூர் திரும்பிய செவிலியர் வேதனை

Published On 2020-05-21 04:31 GMT   |   Update On 2020-05-21 11:06 GMT
பணியில் இருந்தபோது இனவெறி, வேற்றுமை போன்ற பிரச்சினைகளை எதிர்கொண்டதாகவும், மக்கள் சில நேரங்களில் எச்சில் துப்பியதாகவும் ராஜினாமா செய்த செவிலியர்களில் ஒருவர் கூறினார்.
இம்பால்:

மேற்கு வங்காளத்தில் கொரோனாவுக்கு எதிரான போரில் பின்னடைவாக, செவிலியர்கள் பலர் கடந்த வாரம் தங்களது பணியை ராஜினாமா செய்துள்ளனர்.  மணிப்பூரை சேர்ந்த 185 செவிலியர்கள் மாநிலத்தில் பல்வேறு நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரிந்து வந்துள்ளனர்.  இந்த சூழலில், ஒரே நாளில் அவர்கள் அனைவரும் ராஜினாமா செய்து விட்டு சொந்து ஊருக்கு சென்று விட்டனர்.

இதேபோன்று பிற வடகிழக்கு மாநில செவிலியர்களும் மற்றும் ஒடிசாவை சேர்ந்த செவிலியர்களும் ராஜினாமா செய்ய கூடும் என கூறப்படுகிறது.  அதிக எண்ணிக்கையில் செவிலியர்கள் பணியில் இருந்து விலகியதற்கான சரியான காரணம் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.  இதனால் மருத்துவ பணியில் பாதிப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டது.

இந்த சூழலில் ஊர் திரும்பிய செவிலியர்களில் ஒருவரான கிறிஸ்டெல்லா என்பவர் கூறும்போது, ‘எங்களது பணியை விட்டு சென்றதில் எங்களுக்கு மகிழ்ச்சி இல்லை.  ஆனால், பணியில் இருந்தபோது இனவெறி, வேற்றுமை போன்ற பிரச்சினைகளை நாங்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.  மக்கள் சில நேரங்களில் எங்கள் மீது எச்சில் துப்பினர். எங்களுக்கான பாதுகாப்பு கவசங்கள் பற்றாக்குறையாக இருந்தன. நாங்கள் செல்லுமிடங்களில் எல்லாம் மக்கள் எங்களை கேள்வி கேட்டனர்’ என வேதனையுடன் தெரிவித்தார்.

சுமார் 300 செவிலியர்கள் ஏற்கனவே ராஜினாமா செய்து கொல்கத்தாவை விட்டு வெளியேறிய நிலையில், நாளை மேலும் 60 பேர் வெளியேற உள்ளனர். மணிப்பூருக்குத் திரும்பிச் செல்வதற்கு விருப்பம் தெரிவித்து மேலும் பலரிடம் இருந்து அழைப்பு வந்திருப்பதாக கொல்கத்தாவில் உள்ள மணிப்பூர் பவன் துணை கமிஷனர் தெரிவித்தார்.
Tags:    

Similar News