செய்திகள்
கோப்பு படம்

பணிபுரியும் இடங்களில் எச்சில் துப்பினால் அபராதம் - அனைத்து துறைகளுக்கும் மத்திய அரசு உத்தரவு

Published On 2020-05-20 04:00 GMT   |   Update On 2020-05-20 04:00 GMT
பணிபுரியும் இடங்களில் எச்சில் துப்பினால் அபராதம் விதிக்குமாறு அனைத்து துறைகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டு இருக்கிறது.
புதுடெல்லி:

கொரோனா பாதிப்பை தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், கடந்த மார்ச் 25-ந் தேதி முதல் வீட்டில் இருந்து பணியாற்றுமாறு மத்திய அரசு ஊழியர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். இந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை முதல் 50 சதவீத ஊழியர்கள் அலுவலகத்துக்கு வந்து பணியாற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். ஆனால் நேற்று வரை 33 சதவீத ஊழியர்கள்தான் அலுவலகத்துக்கு வந்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், அனைத்து துறைகளுக்கும் மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கனவே பிறப்பித்துள்ள உத்தரவின்படி பணிபுரியும் இடங்களிலும், பொது இடங்களிலும் எச்சில் துப்புவது சட்டப்படி அபராதம் விதிக்கக்கூடிய குற்றம் ஆகும். எனவே மத்திய அரசு அலுவலகங்களில் எச்சில் துப்புவது தடுக்கப்பட வேண்டும்.

எச்சில் துப்பாமல் இருப்பதை சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். எச்சில் துப்புபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.

பணிபுரியும் இடங்களிலும், பொது இடங்களிலும் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். அலுவலகங்களில் ஊழியர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை நடத்துவதற்கும், கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்துவதற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும். ஒரு ஊழியருக்கும் மற்றொரு ஊழியருக்கும் போதுமான இடைவெளி இருக்கவேண்டும்.

இதேபோல் ஒரு ஷிப்டுக்கும் மற்றொரு ஷிப்டுக்கும் இடையே போதுமான நேர இடைவெளி இருக்க வேண்டும். கதவுகள், கைப்பிடிகள் உள்பட ஒட்டுமொத்த அலுவலகத்தையும் கிருமிநாசினி கொண்டு அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மத்திய அரசு அலுவலகங்களிலும், தனியார் அலுவலகங்களிலும் கழிவறைக்கு செல்லும் வழி மற்றும் படிக்கட்டு பகுதிகளில், புகையிலை பொருட்களை போட்டு எச்சில் துப்பி இருப்பதை காணமுடியும். அப்படிப்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்க வகை செய்யும் மத்திய அரசின் உத்தரவின் மூலம் இந்த நிலை மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News