செய்திகள்
ரெயில் நிலையத்திற்கு வெளியே திரண்ட தொழிலாளர்கள்

வதந்தியை நம்பி ஆயிரக்கணக்கில் திரண்ட புலம்பெயர் தொழிலாளர்கள்- மும்பை ரெயில் நிலையத்தில் பரபரப்பு

Published On 2020-05-19 10:32 GMT   |   Update On 2020-05-19 10:32 GMT
சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாக வெளியான வதந்தியை நம்பி புலம்பெயர் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் மும்பை ரெயில் நிலையத்தில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மும்பை:

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களை அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பதற்காக, பல்வேறு நகரங்களில் இருந்து ஷ்ராமிக் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரெயில்களில் பயணம் செய்வதற்கு, அந்தந்த பகுதிகளில் உள்ள அதிகாரிகளிடம் பெயரை பதிவு செய்ய வேண்டும். அதன்படி தொழிலாளர்கள், உரிய நடைமுறைகளின்படி அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

அவ்வகையில், மகாராஷ்டிர மாநிலம் மும்பை பாந்த்ரா ரெயில் நிலையத்தில் இருந்து பீகார் மாநிலம் பூர்ணியா நகருக்கு இன்று ஷ்ராமிக் சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது. இந்த ரெயிலில் பயணம் செய்வதற்காக பதிவு செய்யப்பட்ட பயணிகள் சுமார் 1000 பேர் இன்று காலையில் ரெயில் நிலையத்திற்கு வந்துவிட்டனர். 

இதேபோல் பதிவு செய்யாமலும் ஏராளமானோர் ரெயில் நிலையத்திற்கு வந்தனர். ரெயில் நிலையம் அருகில் உள்ள பாலம் மற்றும் சாலையிலும் ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். 

சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு பதிவு செய்து, அதிகாரிகளால் அழைப்பு விடுக்கப்பட்ட தொழிலாளர்களை மட்டும் ரெயிலில் பயணம் செய்ய போலீசார் அனுமதித்தனர். மற்றவர்களை அங்கிருந்து போலீசார் கலைத்தனர். சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக அவசரம் அவசரமாக ஓடி வந்த தொழிலாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

பீகார் மற்றும் உத்தர பிரதேசத்திற்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாக வதந்தி பரவியதால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அங்கு திரண்டதாக  தகவல் வெளியாகி உள்ளது.
Tags:    

Similar News