செய்திகள்
கர்நாடக முதல்வர் எடியூரப்பா

கர்நாடகத்தில் நாளை முதல் பஸ், ரெயில்கள் ஓடும்- 4 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் நுழைய தடை

Published On 2020-05-18 09:08 GMT   |   Update On 2020-05-18 09:08 GMT
கர்நாடக மாநிலத்தில் பஸ் மற்றும் ரெயில் சேவையை தொடங்க அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார்.
பெங்களூரு:

கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு மே 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர பிற இடங்களில் ஊரடங்கு விதிமுறைகளில் மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி பொது போக்குவரத்தை அனுமதிப்பது குறித்து மாநில அரசுகள் முடிவு எடுக்கலாம் என மத்திய அரசு கூறி உள்ளது. 

இந்நிலையில், 4ம் கட்ட ஊரடங்கு தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் விதிமுறைகள் தளர்வு தொடர்பாக கர்நாடக மாநிலத்தில் முதல்வர் எடியூரப்பா தலைமையில் அமைச்சர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 



இக்கூட்டத்திற்கு பிறகு பேசிய முதல்வர் எடியூரப்பா, கர்நாடக மாநிலத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத இடங்களில், அரசு போக்குவரத்து கழக பேருந்துகள், டாக்சி, ஆட்டோ உள்ளிட்ட பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படும் என அறிவித்தார். 

‘பேருந்துகளில் 30 பேர் மட்டுமே பயணிக்க வேண்டும். அனைவரும் மாஸ்க் கண்டிப்பாக அணிந்திருப்பதுடன், தனி மனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். ரெயில்கள் மாநிலங்களுக்குள் மட்டும் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் கர்நாடகாவில் நுழைய தடை விதிக்கப்படுகிறது. 

திரையரங்குகள், மால்கள் தவிர அனைத்து கடைகள் மற்றும் வணிக வளாகங்களும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், மாநிலத்தில் ஞாயிற்றுக் கிழமை மட்டும் முழு ஊரடங்கு பின்பற்றப்படும். 

டாக்சிகள், ஆட்டோ மற்றும் கேப்களுக்கு, டிரைவருடன் அதிகபட்சம் இரண்டு பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள். சலூன்கள் மற்றும் அழகு நிலையங்களை திறக்கலாம். 

பூங்காக்கள் காலை 7 மணி முதல் காலை 9 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறக்கலாம். இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரையிலான இரவு ஊரடங்கு உத்தரவு தொடரும். நாளை முதல் இந்த புதிய தளர்வுகள் நடைமுறைக்கு வருகின்றன’ என்றும் எடியூரப்பா கூறினார்.
Tags:    

Similar News