செய்திகள்
சுப்ரீம் கோர்ட்

காணொலி விசாரணை பற்றி சுப்ரீம் கோர்ட் புதிய அறிவிப்பு

Published On 2020-05-18 07:46 GMT   |   Update On 2020-05-18 07:46 GMT
காணொலி விசாரணை பற்றி சுப்ரீம் கோர்ட் புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
புதுடெல்லி:

கொரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் நாடு தழுவிய அளவில் ஊரடங்கு அறிவித்ததை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல்கள், கட்சிக்காரர்கள், ஊழியர்கள் என்று அனைத்து தரப்பினரின் வருகைக்கு தடை விதிக்கப்பட்டு கடந்த மார்ச் 25-ந் தேதி முதல் அவசர வழக்குகள் காணொலி மூலம் விசாரிக்கப்பட்டு வருகின்றன. நீதிபதிகள் தங்கள் வீடுகளில் இருந்தே விசாரணையை நடத்தி வந்த நிலையில் வக்கீல்களும் தங்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இருந்தே இந்த காணொலி விசாரணையில் பங்கேற்று வருகின்றனர்.

கொரோனா காரணமாக சுப்ரீம் கோர்ட்டு முழுமையாக இயங்க முடியாத நிலையில் இந்த ஆண்டு கோடை விடுமுறையை ரத்து செய்து மே 18-ந் தேதி தொடங்கி ஜூன் 19-ந் தேதி வரை காணொலி வழியாக விசாரணைகள் தொடர்ந்து நடைபெறும் என்று சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.

இந்தநிலையில் சுப்ரீம் கோர்ட்டு நேற்று வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-



மே 18-ந் தேதியில் இருந்து ஜூன் 19-ந் தேதி வரை சுப்ரீம் கோர்ட்டில் அனைத்து வழக்குகளும் வீடியோ மற்றும் ஆடியோ இணைப்புகள் வழியாக மட்டுமே விசாரிக்கப்படும். இதற்காக சுப்ரீம் கோர்ட்டின் உதவி எண் 1881, வக்கீல்களுக்கும் இணையம் வழியாக மனுவை தாக்கல் செய்யும் மனுதாரர்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த எண் பதிவாளர் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இணையம் வழியாக தாக்கல் செய்யப்படும் மனுக்கள் பற்றியும் இவை தொடர்பான நீதிமன்ற நடவடிக்கை குறித்தும் வக் கீல்கள் மற்றும் மனுதாரர்களின் ஐயங்களுக்கு உடனடி தீர்வு தரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மே 18-ந் தேதியில் இருந்து ஜூன் 19-ந் தேதி வரை காணொலி வழியாக விசாரணை நடத்தும் அமர்வுகளை அமைத்து தலைமை நீதிபதி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

சாதாரண நிலையில் அமர்வுகளில் நடைபெறும் விசாரணைகளை பதிவு செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது போல இந்த காணொலி வழியான விசாரணைகள் எந்த வகையிலும் வீடியோ பதிவு அல்லது சேமித்து வைத்தல் அல்லது ஒலி, ஒளி பரப்புதல் ஆகியவற்றுக்கு முற்றிலும் தடை விதிக்கப்படுகிறது.

இதுவரை பட்டியலிடப்படாத புதிய மனுக்கள் இந்த காணொலி அமர்வு முன்பு விசாரணைக்கு ஒவ்வொன்றாக பட்டியலிடப்படும்.

காணொலி அமர்வுகள் நடைபெறும் நேரம் குறித்து வழக்குகளின் விசாரணை பட்டியலில் தேவையான அவகாசம் அளித்து வெளியிடப் படும்.வழக்கு தொடர்பான வக்கீல்கள் அல்லது வழக்கில் தானே ஆஜராகி வாதாடும் மனுதாரர்கள் இந்த காணொலி விசாரணையில் கலந்து கொள்வதற்கு தங்களிடம் கம்ப்யூட்டர் வசதி உள்ளதா அல்லது சுப்ரீம் கோர்ட்டு வளாகத்தில் உள்ள கம்ப்யூட்டர்களை பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறார்களா என்பதையும் தெரிவிக்க வேண்டும்.

மனுதாரர்கள் முதலில் சுப்ரீம் கோர்ட்டு இணைய தளத்தின் மூலம் தங்கள் மனுவை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணையின்போது கட்சிக்காரர்கள், கோர்ட்டு அவர்களின் கருத்துக்களை கேட்கும் பட்சத்தில் மட்டுமே ஒலிவாங்கியை இயக்கி பேச வேண்டும்.

நேரடியாக கோர்ட்டு அமர்வுகளில் வழக்கு விசாரணைகளில் பங்கேற்பது போலவே காணொலி விசாரணையிலும் நடவடிக்கை மற்றும் உடை ஆகியவை குறித்து தேவையான ஒழுங்கு முறை மற்றும் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டும்.

இவ்வாறு இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News