செய்திகள்
திருப்பதி கோவில்

திருப்பதியில் உள்ளூர் பக்தர்களை தரிசனத்துக்கு அனுமதித்து சோதனை முயற்சி

Published On 2020-05-13 10:48 GMT   |   Update On 2020-05-13 10:48 GMT
திருப்பதியில் கோவில் திறந்ததும் முதலில் உள்ளூர் பக்தர்கள் 5 நாட்களுக்கு அனுமதிக்கப்படுகின்றனர். அந்த சோதனை முயற்சியின் அடிப்படையில் வெளியூர் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
திருமலை:

கொரோனா தடுப்பு ஊரடங்கையொட்டி கடந்த மார்ச் 20-ந்தேதி முதல் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவது ரத்து செய்யப்பட்டுள்ளது. சாமிக்கு நடைபெறும் பூஜைகள் மட்டும் பக்தர்கள் இன்றி நடந்து வருகிறது.

ஊரடங்கு தளர்த்தப்பட்டு பக்தர்களை அனுமதிக்கலாம் என்று அரசு அனுமதி அளித்தால் பக்தர்களை எவ்வாறு தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவது என்பது குறித்து தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

திருப்பதியில் தினமும் 70 ஆயிரம் முதல் 1 லட்சம் பக்தர்கள் வரை தரிசனம் செய்து வந்தனர். பக்தர்கள் கூட்டம் கூட்டமாக கோவிலுக்குள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இனிமேல் அவ்வாறு செய்ய முடியாது.

சமூக இடைவெளியை கடைப்பிடித்து குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தர்கள் தினந்தோறும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

உள்ளூர் பக்தர்களான திருப்பதி, திருச்சானூர் மற்றும் அருகில் உள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள் என 5 ஆயிரம் பேர் வரை முதலில் தரிசனத்திற்கு சோதனை முறையில் அனுமதிக்கலாம் என்று ஆலோசனை நடத்தப்பட்டது.

ஒரு பக்தர் தரிசனம் செய்ய எவ்வளவு நேரமாகிறது என்பதை கணக்கிட்டு அதற்கு தகுந்தாற்போல் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளனர்.

உள்ளூர் பக்தர்கள் கோவில் திறந்ததும் 5 நாட்களுக்கு அனுமதிக்கப்படுகின்றனர். அந்த சோதனை முயற்சியின் அடிப்படையில் வெளியூர் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் வரை அனுமதிக்க முடிவு செய்துள்ளனர்.

தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். 3 மணி நேரத்திற்கு ஒருமுறை தரிசனம் நிறுத்தப்பட்டு கோவில் வளாகத்தில் கிருமி நாசினி தெளிக்கப்படும்.

பக்தர்களுக்கு முகக்கவசம் கட்டாயம். கை கழுவுவதற்காக திரவங்கள் ஆங்காங்கே வைக்கப்பட உள்ளது. பக்தர்களுக்கு தீர்த்தம் மற்றும் தலையில் சடாரி வைத்து தரிசனம் வழங்கப்படாது.

Tags:    

Similar News