செய்திகள்
விசாகப்பட்டினம் தொழிற்சாலை

வி‌ஷ வாயு கசிவால் 12 பேர் பலி: ரசாயன ஆலைக்கு ரூ.50 கோடி அபராதம் - தேசிய பசுமை தீர்ப்பாயம்

Published On 2020-05-09 10:38 GMT   |   Update On 2020-05-09 10:38 GMT
விசாகப்பட்டினத்தில் வி‌ஷ வாயு கசிவால் 12 பேர் பலியான நிலையில் ரசாயன ஆலைக்கு ரூ.50 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி:

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள ஆர்.ஆர்.வெங்கடாபுரம் கிராமத்தில் எல்.ஜி. பாலிமர்ஸ் என்ற ரசாயன தொழிற்சாலையில் நேற்று முன்தினம் அதிகாலை வி‌ஷ வாயு கசிவு ஏற்பட்டது.

தொழிற்சாலையை சுற்றியுள்ள 5 கி.மீ. கிராமங்களுக்கு வி‌ஷ வாயு பரவியது. இதனால் வீடுகளில் தூங்கி கொண்டிருந்தவர்கள், சாலையில் நடந்து சென்றவர்கள் வி‌ஷ வாயுயை சுவாசித்ததால் மயங்கி விழுந்தனர்.



சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். இந்த வி‌ஷ வாயு கசிவால் குழந்தை உள்பட 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

வி‌ஷ வாயு கசிவு காரணமாக கிராமங்களில் இருந்து சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

வாயு கசிவை மாற்று கேசை செலுத்தி கட்டுக்குள் கொண்டு வந்தனர்.



இந்தநிலையில் விசாகப்பட்டினம் தொழிற்சாலை வாயு கசிவு சம்பவம் குறித்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையின் மீது தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நேற்று விசாரணை நடத்தியது.

இதில் எல்.ஜி. பாலிமர்ஸ் ரசாயன தொழிற்சாலைக்கு ரூ.50 கோடி அபராதத்தை விதித்துள்ளது. மேலும் விசாரணை குழு ஒன்றையும் அமைத்துள்ளது. இந்த குழுவினர் தங்களது அறிக்கையை வருகிற 18-ந் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என்றும், வி‌ஷவாயு எவ்வாறு கசிந்தது? விபத்துக்கு யார் காரணம் என்பதை விளக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவரான நீதிபதி ஆதர்ஷ்குமார் கோயல் தனது உத்தரவில் விதிகள் மற்றும் பிற சட்ட விதிகள் பின்பற்றப்படவில்லை என்று தெரிகிறது. இவ்வளவு பெரிய அளவிலான வாயு கசிவு மக்களின் ஆரோக்கியத்தையும், சுற்றுச்சூழலையும் கடுமையாக பாதித்துள்ளது.

ரூ.50 கோடி அபராத ஆரம்ப தொகையை விசாகப்பட்டினம் மாவட்ட மாஜிஸ்திரேட்டிடம் எல்.ஜி. பாலிமர் நிறுவனம் டெபாசிட் செய்யுமாறு உத்தரவிட்டார்.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசும், எல்.ஜி. பாலிமர்ஸ் நிறுவனமும் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார்.
Tags:    

Similar News