செய்திகள்
ராகுல் காந்தி

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இப்போதைய தேவை பண உதவி தான்- ராகுல் காந்தி

Published On 2020-05-08 06:45 GMT   |   Update On 2020-05-08 06:45 GMT
புலம்பெயர் தொழிலாளர்கள் தினமும் இன்னல்களை அனுபவித்து வரும் நிலையில், அவர்கள் உள்ளிட்ட அனைத்து ஏழைகளுக்கும் நிவாரண உதவியை உடனடியாக வழங்க வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார்.
புதுடெல்லி:

மகாராஷ்டிராவில் தங்கி வேலை பார்த்த மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் நேற்று சொந்த ஊருக்கு செல்லும் ரெயிலை பிடிப்பதற்காக அவுரங்காபாத் அருகே தண்டவாளத்தில் நடந்து சென்றனர். நடந்த களைப்பில் நேற்று இரவு கர்மாட் பகுதியில் உள்ள தண்டவாளத்தில் படுத்து தூங்கினர். இன்று அதிகாலை அந்த வழித்தடத்தில் வந்த சரக்கு ரெயில் அவர்கள் மீது மோதியது. இதில் 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலர் காயமடைந்து, அவுரங்காபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித் ஷா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் தங்கள் இரங்கலையும் கவலைகளையும் தெரிவித்துள்ளனர். 



அரசிடம் சரியான திட்டமிடல் இல்லாததால் புலம்பெயர் தொழிலாளர்கள் இன்னல்களை அனுபவித்து வருவதாக பலரும் குறை கூறி உள்ளனர்.

இந்த சம்பவம் பற்றி கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, புலம்பெயர் தொழிலாளர்களுக்காக அரசாங்கத்திடம் கொள்கை இருக்க வேண்டும் என்றும், ஊரடங்கிற்கு பிந்தைய வழிகாட்டு நெறிமுறைகளை தயார் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். 

‘புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இப்போது தேவை ஆதரவும், நிதி உதவியும். அதுவும் இன்றே தேவை. மக்களின் கைகளுக்கு பணம் போய் சேர வேண்டும். ஏழைகளின் வங்கிக் கணக்கில் ஒரு நபருக்கு குறைந்தது 5000 ரூபாய் வீதம் செலுத்த வேண்டும். இதனால் மொத்தம் 50000 கோடி ரூபாய் செலவாகும். இதேபோல் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் உடனடியாக உதவி தேவை. இல்லாவிட்டால் வேலையிழப்புகள் சுனாமியாக மாறும்’ என்றும் ராகுல் காந்தி கூறினார்.
Tags:    

Similar News