செய்திகள்
கோப்பு படம்

நீதிபதிகளுக்கு எதிராக அவதூறு: 2 வக்கீல்கள் உள்பட 3 பேருக்கு சிறை - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

Published On 2020-05-07 04:27 GMT   |   Update On 2020-05-07 04:27 GMT
நீதிபதிகளுக்கு எதிராக அவதூறு பரப்பிய வழக்கில் 2 வக்கீல்கள் உள்பட 3 பேருக்கு சிறை தண்டனை விதித்து சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
புதுடெல்லி:

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் 2 பேர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்தி அவதூறு பரப்பியதாக இந்திய வக்கீல்கள் சங்கத்தலைவர் நிலேஷ் ஓஜா, இந்திய வக்கீல்கள் சங்கத்தின் மராட்டிய மாநில தலைவர் விஜய் குர்லே மற்றும் மனித உரிமை பாதுகாப்பு கவுன்சில் என்ற தன்னார்வ நிறுவனத்தின் தலைவர் ரஷீத் கான் பத்தான் ஆகியோருக்கு எதிராக கடந்த ஆண்டு மார்ச் 27-ந் தேதி கோர்ட்டு அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்த வழக்கை கடந்த மாதம் 27-ந் தேதி விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு இந்த 3 பேர் மீதும் கோர்ட்டு அவமதிப்புக்கான குற்றம் உறுதி செய்யப்பட்டதாக தெரிவித்தது.

இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தீபக் குப்தா, அனிருத்தா போஸ் ஆகியோர் காணொலி காட்சி மூலம் நிலேஷ் ஓஜா உள்ளிட்ட 3 பேருக்கான தண்டனையை அறிவித்தனர். நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியதாவது:-

தற்போது பணியில் உள்ள 2 நீதிபதிகளுக்கு எதிராக அபாண்டமாகவும், ஆதாரமற்ற வகையிலும் குற்றம் சுமத்தியதற்காக இந்த 3 பேருக்கும் கோர்ட்டு அவமதிப்புக்கான தண்டனை உறுதி செய்யப்பட்டு ஒவ்வொரு நபருக்கும் 3 மாதம் சாதாரண சிறை தண்டனையும், தலா ரூ.2000 அபராதமும் விதிக்கப்படுகிறது.

தற்போது நிலவும் கொரோனா நோய்த்தொற்றை கருத்தில் கொண்டு இந்த 3 பேரும் 16 வாரம் கழித்து சுப்ரீம் கோர்ட்டு செகரட்டரி ஜெனரல் முன்னிலையில் சரண் அடையவேண்டும். அப்படி சரணடையாத பட்சத்தில் இந்த 3 பேரையும் கைது செய்ய வாரண்டு பிறப்பிக்கப்படும்.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News