செய்திகள்
கொரோனா சோதனை, எல்லையில் பாதுகாப்பு படை வீரர்

பயங்கரவாதம், கொரோனா ஆகிய இரண்டு வைரசையும் வீழ்த்த வேண்டும் - வெங்கையா நாயுடு

Published On 2020-05-06 12:56 GMT   |   Update On 2020-05-06 12:59 GMT
பயங்கரவாதம் மற்றும் கொரோனா ஆகிய இரண்டு வைரசையும் வீழ்த்த வேண்டும் என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. மேலும், கொரோனா தாக்குதலுக்கு ஆயிரத்து 694 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா ஒரு புறம் வேகமாக பரவி வரும் நிலையில் காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பயங்கரவாதிகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

கொரோனா காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கை பயன்படுத்தி கடந்த சில நாட்களாக பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் பாதுகாப்பு படையினர் 8 பேர் வீர மரணமடைந்துள்ளனர். 

பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதல்களில் சில பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். தற்போதும் காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடுமையான மோதல் நிலவி வருகிறது. 



இந்நிலையில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ''கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் இந்த சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி பயங்கரவாதிகள் மிகவும் வெறுக்கத்தக்க செயல்களை செய்துவிடலாம் என தவறான புரிதலை கொண்டுள்ளனர். அதற்கு இங்கு இடமில்லை. 

பயங்கரவாதம் மற்றும் கொரோனா ஆகிய இரண்டு கொடிய வைரஸ்களுடனும் சண்டையிட்டு அவற்றை வீழ்த்த வேண்டும்’’ என அவர் பதிவிட்டுள்ளார்.  
Tags:    

Similar News