செய்திகள்
ஏக்நாத் கட்சே

21-ந் தேதி நடைபெறும் எம்.எல்.சி. தேர்தலில் போட்டியிட விரும்பும் ஏக்நாத் கட்சே

Published On 2020-05-04 04:28 GMT   |   Update On 2020-05-04 04:28 GMT
மகாராஷ்டிராவில் வருகிற 21-ந் தேதி நடைபெறும் எம்.எல்.சி. தேர்தலில் போட்டியிட பாரதீய ஜனதா மூத்த தலைவர் ஏக்நாத் கட்சே விருப்பம் தெரிவித்து உள்ளார்.
மும்பை :

மகாராஷ்டிராவில் முந்தைய பாரதீய ஜனதா கூட்டணி அரசில் முதல்-மந்திரியாக இருந்த தேவேந்திர பட்னாவிசுக்கு அடுத்த இடத்தில் இருந்தவர் வட மராட்டியத்தில் பாரதீய ஜனதாவின் சக்தி வாய்ந்த தலைவராக கருதப்பட்ட ஏக்நாத் கட்சே. அப்போது ஊழல் புகாரில் சிக்கி மந்திரி பதவியை இழந்த ஏக்நாத் கட்சே அதன் பின்னர் கட்சியில் இருந்து ஓரங்கப்பட்டு வருகிறார்.

கடந்த ஆண்டு நடந்து முடிந்த சட்டசபை தேர்தலிலும் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனால் அவர் கட்சியின் மாநில தலைமை மீது கடும் அதிருப்தியில் இருந்து வருகிறார். கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டது தொடர்பாக அவர் முன்னாள் முதல்-மந்திரியும், தற்போதைய சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான தேவேந்திர பட்னாவிசை விமர்சித்து வந்தார்.

இந்தநிலையில், மாநில மேல்-சபையில் காலியாக உள்ள 9 எம்.எல்.சி. பதவிகளுக்கு மே 21-ந் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த தேர்தலில் பாரதீய ஜனதா சார்பில் போட்டியிட விரும்புவதாக ஏக்நாத் கட்சே தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “நான் மாநில அரசியலில் மிகவும் ஆர்வமாக உள்ளேன். மராட்டிய மேல்-சபையில் கட்சியை பிரதிநிதித்துவபடுத்துவதிலும் விருப்பமுடன் இருக்கிறேன். இந்த விருப்பத்தை கட்சியின் மூத்த தலைவர்களுக்கு தெரிவித்து உள்ளேன்” என்றார்.

இந்த தேர்தலில் தான் சிவசேனா சார்பில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே போட்டியிட்டு தனது பதவியை தக்க வைத்து கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News