செய்திகள்
ஆதார் அடையாள அட்டை

பொது சேவை மையங்களில் ஆதார் அட்டையை மேம்படுத்தும் வசதி - மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத்

Published On 2020-04-29 14:41 GMT   |   Update On 2020-04-29 14:41 GMT
பொது சேவை மையங்கள் மூலமாக ஆதார் அடையாள அட்டையை மேம்படுத்திக்கொள்ளலாம் என மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் அறிவித்துள்ளார்.
புதுடெல்லி:

நமது நாட்டு மக்களுக்கு 12 இலக்கங்களை கொண்ட ஆதார் அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இதில் ஒருவரின் பெயர், முகவரி, சுய தகவல்கள் இடம் பெறுகின்றன. இந்த அட்டையை ஒவ்வொருவருக்கும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வழங்குகிறது.

இந்த ஆதார் அடையாள அட்டை, பல்வேறு அரசு நலத்திட்டங்களுக்கு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது, முகவரி சான்றிதழாகவும் பயன்படுகிறது.

இந்த ஆதார் அடையாள அட்டையில் புதிய தகவல்களை மேம்படுத்துவதற்கு (அப்டேட் செய்வதற்கு), திருத்தங்கள் செய்வதற்கு ஆதார் இணையதளத்தை, உரிய சான்றுகளுடன் நாடலாம்.



ஆனால் கிராமப்புற மக்களிடம் கணினி வசதி, இணையதள வசதி போன்றவை இல்லாததால் ஆதார் அடையாள அட்டையில் தேவையான தகவல்களை சேர்க்கவோ, மாற்றவோ, மேம்படுத்தவோ தனியார் மையங்களை, வங்கிகளில் அல்லது தபால் நிலையங்களில் அமைந்த மையங்களை தேடிச்செல்கிற, அல்லாடுகிற நிலை உள்ளது. இனி இந்த நிலை இல்லை.

அதற்கான அறிவிப்பை மத்திய தகவல் தொடர்பு, சட்டம், நீதித்துறை மந்திரி ரவிசங்கர்பிரசாத், டெல்லியில் நேற்று டுவிட்டரில் வெளியிட்டார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணு துறையின் சார்பில் நாடு முழுவதும் சி.எஸ்.சி. என்று அழைக்கப்படுகிற 20 ஆயிரம் பொது சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த சி.எஸ்.சி. மையங்களுக்கு பொதுமக்கள் சென்று தங்கள் ஆதார் அடையாள அட்டையின் தகவல்களை மேம்படுத்திக்கொள்ளலாம். 20 ஆயிரம் பொது சேவை மையங்களிலும் இந்த வசதி கிடைக்கும்.

சி.எஸ்.சி. மையங்களை நடத்துகிற கிராம அளவிலான தொழில்முனைவோர், ஆதார் பணியை பொறுப்புடன் தொடங்கி மேற்கொள்ள வேண்டும். ஆதார் அட்டைகளை வழங்குகிற இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வழங்கியுள்ள அறிவுறுத்தல்கள்படி செயல்பட வேண்டும்.

இந்த வசதி, கிராமப்புற மக்கள் ஆதார் சேவைகளை தங்கள் வசிப்பிடத்துக்கு அருகேயே பெற வசதியாக அமையும். அதுவும் கொரோனா வைரசால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த மையங்கள் பொதுமக்களுக்கு பெரிய நிவாரணமாக அமையும்.

இந்த வேலையை செய்வதற்கு இனி பொதுமக்கள் வங்கிகளில், தபால்நிலையங்களில் உள்ள ஆதார் மையத்துக்கு செல்ல வேண்டியது இல்லை.

இவ்வாறு அவற்றில் கூறப்பட்டுள்ளது.

சி.எஸ்.சி. மையங்கள், வரும் ஜூன் மாதத்துக்குள் வங்கியில் சேவை வசதிகளுடன், தேவையான உள் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி கொள்வதற்கு இந்திய தனித்துவ அடையாள ஆணையம் கெடு வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

சி.எஸ்.சி. மையங்கள் வாயிலாக ஆதார் அடையாள அட்டையை மேம்படுத்திக்கொள்ளும் பணியினை செய்து கொள்வதற்கு அனுமதி அளித்ததற்காக மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத்துக்கு சி.எஸ்.சி. தலைமை செயல் அதிகாரி டாக்டர் தினேஷ் தியாகி நன்றி தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News