செய்திகள்
மத்திய அரசு

50 ஐ.ஆர்.எஸ். அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு முடிவு

Published On 2020-04-27 11:28 GMT   |   Update On 2020-04-27 15:16 GMT
மத்திய நிதித் துறை ஐ.ஆர்.எஸ். அதிகாரிகளுக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

கொரோனாவால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை சமாளிக்க மத்திய அரசு சில வரிமாற்றங்களை செய்ய வேண்டும் என்று ஐ.ஆர்.எஸ். அதிகாரிகள் குழு ஒன்று சிபாரிசு செய்து இருந்தது.

50 இளம் ஐ.ஆர்.எஸ். அதிகாரிகள் இதுசம்மந்தமாக அறிக்கை ஒன்றை தயாரித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருந்தனர்.

மேலும் மத்திய அரசுக்கும் அதை அனுப்பி இருந்தார்கள். அதில் 1 கோடிக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு வரம்பு (ஸ்லாப்) வீதத்தை 40 சதவிகிதமாக உயர்த்துவது, 5 கோடிக்கு மேல் வருமானம் உள்ளவர்களிடம் செல்வ வரி விதிப்பது போன்ற பல சிபாரிசுகளை கூறி இருந்தார்கள்.

தற்போது கொரோனா பாதிப்பால் அனைத்து தொழில் துறைகளும், வியாபாரங்களும் பாதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் ஐ.ஆர்.எஸ். அதிகாரிகள் இவ்வாறு கூறியிருந்தது தொழில் அதிபர்கள், வியாபாரிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து மத்திய நிதித் துறை ஐ.ஆர்.எஸ். அதிகாரிகளுக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. மேலும் இது சம்மந்தமாக விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் 50 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் திட்டமிட்டுள்ளது.

மேலும் ஐ.ஆர்.எஸ் அதிகாரிகள் சங்கமும் அந்த 50 அதிகாரிகளையும் கண்டித்துள்ளது.

அவர்கள் தன்னிச்சையாக செயல்பட்டு விட்டார்கள். இதற்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்றும் ஐ.ஆர்.எஸ். அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளது.
Tags:    

Similar News