செய்திகள்
உச்ச நீதிமன்றம்

வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களை அழைத்து வர உத்தரவிட முடியாது- உச்ச நீதிமன்றம்

Published On 2020-04-13 10:09 GMT   |   Update On 2020-04-13 10:09 GMT
தற்போதைய சூழ்நிலையில் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வருவது தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
புதுடெல்லி:

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பலர் வேலை இழந்துள்ளனர். பல்வேறு நாடுகளுக்கு சுற்றுலா சென்றவர்களும் தாயகம் திரும்ப முடியாமல் தவிக்கின்றனர். இவ்வாறு வெளிநாடுகளில் சிக்கித் தவித்த இந்தியர்கள் பலர் மீட்கப்பட்டு தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர்.  மேலும் பலர் பல்வேறு நாடுகளில் உள்ளனர். 

அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வருவதற்கு அனுமதி அளிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 

இந்த மனுக்கள் மீது இன்று விசாரணை நடத்திய நீதிபதிகள், இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை. தற்போதைய சூழ்நிலையில் மற்ற நாடுகளில் உள்ள இந்தியர்களை அழைத்து வருவது தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என தெரிவித்தனர். 

‘கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக, மத்திய அரசு நடைமுறைப்படுத்தி உள்ள ஊரடங்கு உத்தரவு மற்றும் சமூக விலகல் போன்ற நடவடிக்கைகளை பலவீனப்படுத்த விரும்பவில்லை. இந்த வழக்குகள் மீது ஒரு மாதத்திற்கு பிறகு விசாரணை நடைபெறும்’ என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். 

Tags:    

Similar News