செய்திகள்
தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா

ஒரு வருடத்திற்கு 30 சதவீத சம்பளத்தை விட்டுக்கொடுத்த தேர்தல் ஆணையர்கள்

Published On 2020-04-13 07:51 GMT   |   Update On 2020-04-13 07:51 GMT
கொரோனா தடுப்பு பணிகளுக்கு தங்கள் பங்களிப்பை வழங்கும் வகையில் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் இரண்டு தேர்தல் ஆணையர்கள் தங்கள் சம்பளத்தில் 30 சதவீதத்தை விட்டுக்கொடுத்துள்ளனர்.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்காக நிதி திரட்டப்பட்டு வருகிறது. பிரதமரின் நிவாரண நிதி, மாநில முதலமைச்சர்களின் நிவாரண நிதிக்கு பல்வேறு தரப்பினரும் நிதி வழங்கி வருகின்றனர். கொரோனா தடுப்பு பணிகளுக்காக ஒரு வருடத்திற்கு பிரதமர் உள்பட எம்.பி.க்களின் சம்பளம் 30 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது. 

இதேபோல் குடியரசு தலைவர், குடியரசு துணைத் தலைவர் மற்றும் ஆளுநர்களும் தங்கள் சம்பளத்தில் இருந்து 30 சதவீதம் பிடித்தம் செய்ய முன்வந்தனர். 

இந்நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தேர்தல் ஆணையர்கள் அசோக் லவசா, சுஷில் சந்திரா ஆகியோரும் தாமாக முன்வந்து தங்களது அடிப்படை சம்பளத்தில் இருந்து 30 சதவீதம் குறைத்துக்கொள்ள முடிவு செய்தனர்.  கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு தங்கள் பங்களிப்பை வழங்கும் வகையில், ஒரு வருடத்திற்கு இவ்வாறு 30 சதவீத சம்பள பிடித்தம் செய்துகொள்ளலாம் என கூறி உள்ளனர்.

குடியரசு தலைவர், குடியரசு துணைத்தலைவர் மற்றும் பிரதமரைப் பின்பற்றி தாங்களும் சம்பளத்தை குறைத்துக்கொள்ள முடிவு செய்ததாக தேர்தல் ஆணையர்கள் கூறி உள்ளனர். 

Tags:    

Similar News