செய்திகள்
ஜப்பான் பிரதமருடன் பிரதமர் மோடி.

கொரோனா தடுப்பு நடவடிக்கை - நேபாளம், ஜப்பான் பிரதமர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு

Published On 2020-04-10 10:54 GMT   |   Update On 2020-04-10 10:54 GMT
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக நேபாளம் மற்றும் ஜப்பான் நாட்டு பிரதமர்களுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடினார்.
புதுடெல்லி:

சீனாவில் உருவான கொரோனா வைரசால் உலகம் முழுவதும் கடும் பாதிப்படைந்து வருகிறது. பல்வேறு நாடுகள்  கொரோனா வைரசில் இருந்து காத்துக்கொள்ள ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளன.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில், இந்தியாவிலும் 21 நாள் ஊரடங்கு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு  உள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக நேபாளம் மற்றும் ஜப்பான் நாட்டு பிரதமர்களுடன் பிரதமர் மோடி இன்று தொலைபேசியில் உரையாடினார்.

இதுதொடர்பாக, பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:

நேபாள பிரதமர் ஷர்மாவுடன் போனில் பேசினேன். கொரோனா வைரசால் எழுந்துள்ள சூழ்நிலைகள் குறித்து ஆலோசனை நடத்தினோம். இந்த சவாலை எதிர்த்து போராட நேபாள மக்கள் கொண்டிருக்கும் உறுதிக்கு நான் பாராட்டு தெரிவித்தேன். கொரோனாவுக்கு எதிரான நமது போராட்டத்தில் நேபாளத்துடன் நாம் துணை நிற்கிறோம் என பதிவிட்டுள்ளார்.

இதேபோல், கொரோனா அச்சுறுத்தல் தொடர்பாக எனது நண்பர் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயுடன் ஆக்கப்பூர்வமான ஆலோசனை நடத்தினேன். இந்தியா, ஜப்பான் இடையிலான சர்வதேச ஒத்துழைப்பானது புதிய தொழில்நுட்பங்களை உருவாக்க உதவுவதுடன், கொரோனா வைரசுக்கு பின்னர் உலக மக்கள் இந்தோ-பசிபிக் பகுதி மக்கள் நமது மக்களுக்காக தீர்வு கிடைக்கவும் பயன்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேசி வருவது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News