செய்திகள்
கோப்புபடம்

ஊரடங்கு காலத்தில் டிவி பார்ப்பதில் அதிக நேரம் செலவிடும் இந்தியர்கள்

Published On 2020-04-10 09:08 GMT   |   Update On 2020-04-10 09:08 GMT
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், மக்கள் டிவி பார்ப்பதில் அதிக நேரம் செலவிடுவதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
மும்பை:

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் முடங்கி கிடக்கின்றனர். இதனால் பலர் தங்கள் வீட்டில் பிடித்தமான வேலைகளை செய்வது, குழந்தைகளுடன் விளையாடுவது, மறந்து போன பாரம்பரிய விளையாட்டுகளில் ஈடுபடுபது என பொழுதை கழிக்கின்றனர். ஆனால் பெரும்பாலான மக்களுக்கு தொலைக்காட்சியும், ஸ்மார்ட்போன்களும்தான் பொழுதுபோக்கு சாதனமாக மாறியிருக்கிறது.

இதுதொடர்பாக ஒளிபரப்பு பார்வையாளர் ஆய்வு கவுன்சில் (பார்க்) மற்றும் நீல்சன் நிறுவனம் நடத்திய ஆய்வில், ஊரடங்கு காலத்தில் இந்தியர்கள் தொலைக்காட்சி பார்ப்பதில் அதிக நேரம் செலவிடுவது தெரியவந்துள்ளது.

கடந்த வாரம் இந்தியர்கள் 1.27 டிரில்லியன் நிமிடங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்துள்ளனர். இது ஒரு வாரத்தில் தொலைக்காட்சி பார்த்த அதிக நேரம் ஆகும்.

கொரோனா வைரசுக்கு முந்தைய காலத்துடன் (ஜனவரி 11-31) ஒப்பிடும்போது, தொலைக்காட்சி பார்ப்பது கடந்த வாரத்தில் 43% உயர்ந்துள்ளது. சராசரி தினசரி பார்வையாளர்கள் மேலும் 12% அதிகரித்து, 56 கோடியில் இருந்து  62.7 கோடியாக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு முந்தைய காலத்தில் ஒரு பார்வையாளர் தினமும் சராசரியாக 3 மணி 46 நிமிடங்கள் தொலைக்காட்சி பார்த்துள்ளார். அது தற்போது 4 மணி 48 நிமிடங்களாக அதிகரித்துள்ளது.

பார்வையாளர்கள் மணிக்கணக்கில் தொலைக்காட்சி பார்ப்பது மட்டுமல்லாமல், அதிகமான சேனல்களை மாற்றி மாற்றி பார்க்கிறார்கள். சராசரியாக ஒருவர் 23 சேனல்களை பார்ப்பதாக புள்ளிவிவரம் கூறுகிறது.

இரவு 7 மணி முதல் 11 மணி வரையிலான பிரைம் டைம் பார்வையாளர்கள் 11 சதவீதமும், பிரைம் டைம் அல்லாத நேரத்தில் பார்வையாளர்கள் 81 சதவீதமும் அதிகரித்துள்ளனர். பார்வையாளர்கள் பலர் நள்ளிரவுக்கு பிறகும் (அதிகாலை 1-2 மணி வரை) தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதிகாலையிலேயே மீண்டும் (அதிகாலை 4-6 மணி வரை) பார்க்க தொடங்குகிறார்கள்.

டிவி செய்திகள் மற்றும் திரைப்படங்கள் பார்ப்பது எல்லா நேரத்திலும் அதிகமாக இருந்தாலும், கடந்த வாரம் திரைப்படம் பார்த்த பார்வையாளர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News