செய்திகள்
இந்தியா, சீனா

அருணாசலபிரதேசத்தில் இருந்து கடத்தப்பட்ட இந்திய வாலிபரை சீன ராணுவம் விடுவித்தது

Published On 2020-04-08 12:53 GMT   |   Update On 2020-04-08 12:53 GMT
அருணாசலபிரதேசத்தில் இருந்து கடத்தப்பட்ட இந்திய வாலிபரை சீன ராணுவம் விடுவித்தது. கொரோனா சந்தேகத்தின்பேரில், அந்த வாலிபர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளார்.
இடாநகர்:

இந்தியாவுக்கு சொந்தமான அருணாசலபிரதேசத்தை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான மக்மோகன் எல்லைக்கோடு தெளிவாக வரையறுக்கப்படாததால், அடிக்கடி எல்லை தகராறு நடந்து வருகிறது.

இதற்கிடையே, அருணாசலபிரதேசத்தை சேர்ந்த டோக்லி சிங்கம் (வயது 21) என்பவர், கடந்த மாதம் 19-ந் தேதி, மேல் சுபன்ஸ்ரீ மாவட்டத்தில் மக்மோகன் எல்லைக்கோடு அருகே மீன் பிடிக்கவும், மூலிகை பறிக்கவும் 2 நண்பர்களுடன் சென்றார்.

அப்போது, அங்கு சீன ராணுவ வீரர்கள் வந்தனர். அவர்களை பார்த்தவுடன் 2 நண்பர்களும் ஓடி விட டோக்லி சிங்கம் மட்டும் மாட்டிக்கொண்டார். அவரை துப்பாக்கி முனையில் சீன ராணுவத்தினர் கடத்திச் சென்றனர்.

இந்த தகவல் வெளியானவுடன், அவரை மீட்கக்கோரி அருணாசலபிரதேசத்தில் பல்வேறு அமைப்புகள் குரல் கொடுத்தன. கவர்னரிடம் புகார் கொடுக்கப்பட்டது. போலீசில் டோக்லி சிங்கம் குடும்பத்தினர் புகார் அளித்தனர்.

அவரை மீட்காவிட்டால் போராட்டம் நடத்தப்போவதாக மாணவர் சங்கம் எச்சரிக்கை விடுத்தது. மேலும், சீன ராணுவத்திடம் இந்திய ராணுவம் இப்பிரச்சினையை எடுத்துச் சென்றது.

இந்நிலையில், கடத்தப்பட்ட டோக்லி சிங்கத்தை சீன ராணுவம் நேற்று விடுதலை செய்தது.

எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவத்திடம் அவரை ஒப்படைத்தது. இத்தனை நாட்கள் சீனாவில் இருந்ததால், அவருக்கு கொரோனா தாக்கி இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, டோக்லி சிங்கத்தை இந்திய ராணுவம் தனிமைப்படுத்தி வைத்துள்ளது. 14 நாட்கள் தனிமையில் வைத்திருந்த பிறகு, குடும்பத்தினரிடம் அவர் ஒப்படைக்கப்படுவார் என்று ராணுவ செய்தித்தொடர்பாளர் கோங்சை தெரிவித்தார்.
Tags:    

Similar News