செய்திகள்
வைரல் புகைப்படம்

இந்தியாவில் ஊரடங்கு இப்படி தான் பிறப்பிக்கப்படுகிறதா?

Published On 2020-04-07 06:32 GMT   |   Update On 2020-04-07 06:32 GMT
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு இப்படி தான் பிறப்பிக்கப்படுவதாக தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மத்திய அரசின் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும் என ஒட்டுமொத்த தேசமும் கலக்கத்துடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில், உலக சுகாதார மையம் வெளியிட்டதாக தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வைரல் தகவல்களில் நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க உலக சுகாதார மையம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கும் நான்கு கட்டங்களில் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பின்பற்றி வருவதாக கூறப்படுகிறது. ஆய்வு செய்ததில் வைரல் தகவலில் துளியும் உண்மையில்லை என தெரியவந்துள்ளது.

ஃபேஸ்புக் மற்றும் இதர சமூகவலைதளங்களில் வைரலாகும் தகவலில், ஊரடங்கின் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றிய தகவல்களை உலக சுகாதார மையம் வெளியிட்டதாக கூறப்பட்டுள்ளன. இதையே மத்திய அரசும் பின்பற்றி வருவதாக அதில் கூறப்பட்டுள்ளது.



வைரல் குறுந்தகவலில் முதற்கட்டமாக ஒரு நாள் ஊரடங்கு, பின் இரண்டாவது கட்டமாக 21 நாட்கள் ஊரடங்கு, பின் ஐந்து நாட்களுக்கு ஊரடங்கு கிடையாது. பின் ஐந்து நாட்கள் கழித்து 28 நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்படும். இதைத் தொடர்ந்து மேலும் ஐந்து நாட்களுக்கு ஊரடங்கு இல்லாமல், இறுதியாக 15 நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

ஆய்வில் உலக சுகாதார மையம் சார்பில் ஊரடங்கின் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் எதுவும் விதிக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது. உலகில் எந்த நாடும் ஊரடங்கு பிறப்பிக்க எந்த வழிமுறையையும் பின்பற்றவில்லை. ஊரடங்கு காலத்தில் பின்பற்றுவதற்கென ஒவ்வொரு நாட்டிற்கும் சொந்த விதிமுறை மற்றும் கட்டுப்பாடுகள் இருக்கின்றன.

இந்தியாவில் மார்ச் 22 ஆம் தேதி ஒருநாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பின் ஊரடங்கு உத்தரவு 21 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டு இருப்பது உண்மையே. இந்த உத்தரவு ஏப்ரல் 14 ஆம் தேதியுடன் நிறைவுபெறுகிறது. மேலும், நாட்டில் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கும் திட்டம் தற்போதைக்கு கிடையாது என அமைச்சரவை செயலாளர் ராஜிவ் கௌபா தெரிவித்தார்.  

அந்த வகையில், வைரல் தகவல்களில் துளியும்  உண்மையில்லை என்பது உறுதியாகி விட்டது. 

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
Tags:    

Similar News