செய்திகள்
தேவேகவுடா

சிறுபான்மையினரை தவறாக விமர்சிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை: எடியூரப்பாவுக்கு தேவேகவுடா கடிதம்

Published On 2020-04-07 06:05 GMT   |   Update On 2020-04-07 06:05 GMT
கொரோனா விவகாரத்தில் சிறுபான்மையினரை தவறாக சித்தரித்து விமர்சிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு முன்னாள் பிரதமர் தேவேகவுடா கடிதம் எழுதியுள்ளார்.
பெங்களூரு:

முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு முன்னாள் பிரதமர் தேவேகவுடா ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

“கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதையொட்டி ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கு எங்களின் முழு ஆதரவு உள்ளது. டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்ற சிறுபான்மையினரை கண்டுபிடித்து அவர்களை தனிமைபடுத்தி கண்காணிக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கையை பாராட்டுகிறேன்.

அந்த சமுதாயத்தை சேர்ந்த விஷமிகள் செய்த தவறை கொண்டு, ஒட்டுமொத்தமாக அந்த சமூகத்தினரையும் குறியாக கொண்டு விமர்சிப்பது துரதிர்ஷ்டம். தவறு செய்தவர்கள் மீது மாநில அரசு சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசின் கடமை. அதேபோல் சிறுபான்மையினரை தவறாக சித்தரித்து, சமூக வலைத்தளங்களில் கருத்துகளை வெளியிடுபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

கொரோனாவுக்கு எதிராக முன்னணியில் நின்று போராடி வரும் டாக்டர்கள், நர்சுகள், துப்புரவு தொழிலாளர்கள், ஆஷா மருத்துவ பணியாளர்கள் மற்றும் துணை மருத்துவ பணியாளர்களின் சேவை மிகுந்த பாராட்டுக்குரியவை. ஆனால் அவர்கள் மீதும் ஒரு பகுதிகளில் தாக்குதல் நடப்பது, அவர்களின் சேவை மனப்பான்மையை அவமதிப்பதாக உள்ளது.

அத்தகைய தாக்குதல் நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவ பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். வட கர்நாடகத்தை சேர்ந்த ஏராளமான கூலித்தொழிலாளர்கள் பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு வந்து உழைத்து வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். திடீரென ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால், அவர்களின் நிலை மோசமாகிவிட்டது. அவர்கள் நடைபயணாக தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்கிறார்கள். ஆனால் ஆங்காங்கே மாவட்டங்களின் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் அந்த தொழிலாளர்கள் திரிசங்கு நிலையில் சிக்கி தவிக்கிறார்கள்.

அந்த தொழிலாளர்களுக்கு மாநில அரசு உணவு வழங்குகிறது. ஆனால் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உள்பட அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும். கட்டிட தொழிலாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது. இது அவர்களின் வாழ்க்கையை நடத்த போதுமானது அல்ல. டெல்லி மாநில அரசு அறிவித்துள்ளது போல், தலா ரூ.5,000 வழங்க வேண்டும்.

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் தலா ரூ.5,000 வழங்க வேண்டும். கர்நாடகத்தில் தினமும் 8.84 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், கூடுதலாக உள்ள பாலை வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்ய முடியாத நிலை உள்ளது. அந்த கூடுதல் பாலை கொண்டு, ஏழை மக்களுக்கு தலா 1 லிட்டர் இலவசமாக வழங்க வேண்டும். கூடுதல் பாலை கொண்டு நெய் போன்ற பால் பொருட்களை உருவாக்கி விற்பனை செய்ய வேண்டும்.

ஊரடங்கு உத்தரவால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தக்காளி, காய்கறிகள், பழங்களை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் பிரச்சினையில் சிக்கியுள்ளனர். இந்த நேரத்தில் மாநில அரசு விவசாயிகளுக்கு உரிய உதவிகளை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அந்த விவசாயிகள் தற்கொலை முடிவை எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

கேரளாவில் மாநில அரசு விவசாயிகளிடம் நேரடியாக சென்று, அங்கேயே நியாயமான விலை கொடுத்து விளைபொருட்களை கொள்முதல் செய்கிறது. அத்தகைய நிலை கர்நாடகத்தில் இல்லை. அந்தந்த மாவட்ட பொறுப்பு மந்திரிகள் மூலம் தக்காளி, பழங்களை கொள்முதல் செய்து, அதே இடத்தில் பணம் பட்டுவாடா செய்யும் பணியை அரசு செய்ய வேண்டும்.”

இவ்வாறு தேவேகவுடா தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News