செய்திகள்
கோப்புபடம்

இந்தியாவில் கொரோனா தாக்குதல் குறித்த அதிரவைக்கும் புள்ளி விவரங்கள்

Published On 2020-04-06 01:25 GMT   |   Update On 2020-04-06 01:25 GMT
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளானவர்களில் 83 சதவீதம்பேர், 60 வயதுக்கு குறைந்தவர்கள்தான் என்ற அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரம் வெளியாகி இருக்கிறது.
புதுடெல்லி:

கொரோனா வைரஸ் பெரும்பாலும் வயதானவர்களையே அதிகம் தாக்க வாய்ப்பு இருக்கிறது என்றுதான் உலக அளவில் தகவல்கள் வெளிவந்தன.

ஆனால் இந்தியாவில் இது தலைகீழாக இருக்கிறது. இங்கு வயதானவர்கள் குறைவான அளவிலும், குறைந்த வயதினர் அதிக அளவிலும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி இருக்கிறார்கள். இதுபற்றிய அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்கள் வருமாறு:-

* இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளானவர்களில் 83 சதவீதம் பேர் 60 வயதுக்கு உட்பட்டவர்கள்தான்.

* பெரும்பான்மை என்று பார்த்தால் இளம் வயதினரைத்தான் சொல்ல வேண்டியதிருக்கிறது. கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாவர்களில் 41 சதவீதம் பேர் 21 வயது முதல் 40 வயது வரையிலானவர்கள் ஆவார்கள்.

இவர்களை வகைப்படுத்தி பார்த்தால், வெளிநாடு பயணத்தின் வாயிலாகத்தான் பலர் கொரோனாவின் பாதிப்புக்கு ஆளானோர் பலர். வேலை பார்ப்பவர்கள், மாணவர்கள் என பல தரப்பினரும் அடங்குவார்கள்.

* கொரோனா தாக்குதலுக்கு ஆளாகி இருப்போரில் 8.6 சதவீதம் பேர் 0-20 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர்.

* கொரோனா நோயாளிகள் பங்களிப்பில் 41 முதல் 60 வயதானோரின் பங்களிப்பு 32.8 சதவீதம் ஆகும்.

* 60 வயதை கடந்தவர்களின் பங்களிப்பு 16.7 சதவீதம் ஆகும்.

* இந்தியாவில் கொரோனா வைரஸ் நோயாளிகளில் 4-ல் 3 பேர் 20-60 வயது பிரிவினர் ஆவர்.

* கொரோனாவில் இறப்பு வீதம் என்று பார்க்கிறபோது மட்டும் உலக அளவில் வயதானோர்தான் அதிக அளவில் பலியாகி இருக்கிறார்கள். அவர்களுக்கு வயது மூப்பு, நீரிழிவு, இதய நோய்கள், உயர்ரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகள் இருப்பதும் இதில் முக்கிய காரணம் ஆகிறது.

ஆனால் இந்தியாவை பொறுத்தமட்டில் முதியோர் இறப்பு வீதம் 17 சதவீதமாகத்தான் இருப்பது ஆச்சரியம் அளிப்பதாக அமைந்துள்ளது.

இந்த புள்ளி விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு இருக்கிறது.

இன்றைய நாளில் அதிக எண்ணிக்கையில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளானோரை கொண்டுள்ள அமெரிக்காவில் கொரோனா பாதிக்கப்பட்டோரில் 29 சதவீதம் பேர் 20-44 வயது பிரிவினர் ஆவர்.

60 வயதை கடந்தவர்களின் பங்களிப்பு அங்கு 32 சதவீதமாக இருக்கிறது. 
Tags:    

Similar News