செய்திகள்
கோப்புபடம்

நோய் கண்டறியும் கருவிகளின் ஏற்றுமதிக்கு தடை - மத்திய அரசு உத்தரவு

Published On 2020-04-06 01:08 GMT   |   Update On 2020-04-06 01:08 GMT
மருத்துவ பரிசோதனை மையங்களில் நோய் கண்டறியும் சோதனை கருவிகள் மற்றும் சிகிச்சைக்கான கருவிகளின் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
புதுடெல்லி:

உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்தநிலையில் நோய் கண்டறியும் சோதனை கருவிகள் மற்றும் சிகிச்சைக்கான உபகரணங்களை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு முழுவதுமாக தடை விதித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகம் நேற்று ஒரு அறிவிப்பாணை வெளியிட்டது. அதில், “பரிசோதனை மையங்களில் உபயோகப்படுத்தும் அனைத்து விதமான நோய் கண்டறியும் சோதனை கருவிகள் மற்றும் சிகிச்சைக்கான உபகரணங்களின் ஏற்றுமதிக்கு முற்றிலும் தடை விதிக்கப்படுகிறது” என கூறப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் அறிவுரையின் அடிப்படையில் இந்த முடிவை எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.

கொரோனா நோய்த்தொற்று பரவி வரும் தற்போதைய சூழலில் நோய் கண்டறியும் சோதனை கருவிகள் மற்றும் சிகிச்சைக்கான உபகரணங்கள், அதிக அளவில் உள்நாட்டில் கிடைப்பதற்கு மத்திய அரசின் இந்த முடிவு வழிவகுக்கும்.

நாட்டில் அனைத்து மருத்துவர்களுக்கும், சுகாதார பணியாளர்களுக்கும் நோய் கண்டுபிடிப்பு மற்றும் சிகிச்சைக்கான உபகரணங்கள் தாராளமாக கிடைக்கும் வகையில் அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

நோய்த்தொற்றில் இருந்து பாதுகாக்கும் முக கவசங்கள், சானிடைசர்கள், கையுறைகள் மற்றும் வெண்டிலேட்டர்கள் ஆகியவற்றுக்கு பற்றாக்குறை இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News