செய்திகள்
மத்திய சுகாதாரத்துறை மந்திரி டாக்டர் ஹர்சவர்தன்

கொரோனா வைரசுக்கு மத்திய அரசு சுகாதார காப்பீடு திட்டத்தில் இலவச சோதனை, சிகிச்சை

Published On 2020-04-05 10:31 GMT   |   Update On 2020-04-05 10:31 GMT
கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக தனியார் பரிசோதனை கூடங்களில் பரிசோதனையையும், அரசு அறிவித்துள்ள சிறப்பு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சையையும் அரசு சுகாதார காப்பீடு திட்டத்தில் இலவசமாக பெறலாம் என அறிவித்துள்ளது.
புதுடெல்லி:

மத்தியில் அமைந்துள்ள பிரதமர் மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கூட்டணி அரசானது, ஏழை, எளியோருக்கும், நலிவடைந்த பிரிவினருக்கும் ‘ஆயுஷ்மான் பாரத் ஜன் ஆரோக்கிய யோஜனா’ என்ற சுகாதார காப்பீடு திட்டத்தை நிறைவேற்றி வருகிறது.

இந்த திட்டத்தில் சேர்ந்து, பலன் அடைந்து வருகிறவர்கள் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக தனியார் பரிசோதனை கூடங்களில் பரிசோதனையையும், அரசு அறிவித்துள்ள சிறப்பு ஆஸ்பத்திரிகளில் 
சிகிச்சையையும் இலவசமாக பெறலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதையொட்டி தேசிய சுகாதார ஆணையம் என்.எச்.ஏ. நேற்று வெளியிட்ட அறிக்கையில், “கொரோனா வைரசுக்கான பரிசோதனையும், சிகிச்சையும் அரசு துறையில் இலவசமாக கிடைக்கிறது. இப்போது சுகாதார காப்பீடு திட்டத்தின் கீழ் பலன் பெறுகிற 50 கோடிக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசுக்கு தனியார் பரிசோதனைக்கூடங்களில் இலவசமாக பரிசோதனை செய்து கொள்ளலாம். அரசு அறிவித்துள்ள சிறப்பு தனியார் ஆஸ்பத்திரிகளில் இலவச சிகிச்சையும் பெறலாம்” என கூறப்பட்டுள்ளது.

மேலும் இதுபற்றி மத்திய சுகாதாரத்துறை மந்திரி டாக்டர் ஹர்சவர்தன் கூறும்போது, “முன் எப்போதும் இல்லாத வகையில் கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள நெருக்கடியால், தனியார் துறையை மிக முக்கிய பங்காளியாகவும், கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் பங்குதாரராகவும் தீவிரமாக ஈடுபடுத்த உள்ளோம்” என குறிப்பிட்டார்.
Tags:    

Similar News