செய்திகள்
டாக்டர் டேவிட் நபரோ

21 நாள் ஊரடங்கு துணிச்சலான முடிவு - உலக சுகாதார நிறுவனம் சொல்கிறது

Published On 2020-04-04 04:01 GMT   |   Update On 2020-04-04 04:01 GMT
இந்தியாவில் 21 நாள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது துணிச்சலான முடிவு என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
70 வயதான இவர், இங்கிலாந்தைச் சேர்ந்த மருத்துவ அறிஞர். அங்கு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திலும், லண்டன் பல்கலைக்கழகத்திலும் படித்தவர்.

இவரை புறக்கணித்துவிட்டு மருத்துவ ரீதியில் இந்த கொரோனாவைப் பற்றி யாரும் அறுதியிட்டுக் கூறிவிட முடியாது. ஆமாம், கொரோனா வைரஸ் பிரச்சினையில் இவர்தான் ‘ஹூ’ என்று அழைக்கப்படுகிற உலக சுகாதார நிறுவனத்தின் சிறப்பு தூதர்.

இந்தியாவில் 21 நாள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, அது நடைமுறையில் இருந்து வரும் வேளையில், அரசியல் ரீதியில் திட்டமிடப்படாத ஊரடங்கு என விமர்சிக்கப்பட்டாலும்கூட, வல்லுனரான இவரது கருத்துகள் சிந்தனையைக் கிளறுவதாக இருக்கிறது. வாசித்துப்பாருங்கள். ஒப்புக்கொள்வீர்கள். இதோ...

கொரோன வைரசை பொறுத்தமட்டில் நீங்கள் சீக்கிரமாக களத்தில் இறங்கி விட்டீர்கள். அப்படி இல்லாமல் இருந்திருந்தால், கொரோனா வைரஸ் பிரச்சினை மிக வேகமாக வளர்ந்து, விஸ்வரூபம் எடுத்து, அதை நிர்வகிப்பது என்பது மிக மிக கடினமான பணியாக அமைந்திருக்கும்.

குறைவான எண்ணிக்கையில் ஆனவர்களை மட்டுமே பாதித்திருக்கிற நாடுகளில், அரசாங்கத்தின் ஆதரவு ஒரு பக்கம் பலமாக இருக்கிறது. இன்னொரு பக்கம் சமூக அளவில் வலுவாகவும் எதிர்கொள்வதால், நாங்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறோம்.

இதை சமூக அளவில் தொடங்கி, கொரோனா வைரஸ் பாதித்தவர்களை கண்டுபிடித்து, அவர்களை தனிமைப்படுத்தி, அவர்களோடு தொடர்பில் இருந்தவர்களையெல்லாம் கண்டுபிடித்து, அவர்களையும் தனிமைப்படுத்தி பராமரிக்க வேண்டும்.

ஊரடங்கு மூலம், கொரோனா வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புகளை குறைக்க வேண்டும். ஊரடங்கு பிறப்பித்து, சமூக அளவில் பரவாமல் இருப்பதற்கான திறனையும், சமூகத்தில் உருவாக்க வேண்டும். இந்தியாவில் இதெல்லாம் அங்கீகரிக்கப் பட்டிருப்பதை காண முடிகிறது.

இந்தியாவை பொறுத்தமட்டில் ஊரடங்கு என்பதை முன்கூட்டியே செய்திருக்கிறார்கள். ஒப்பீட்டளவில் மிகக்குறைந்த எண்ணிக்கையிலானவர்களையே அந்த வைரஸ் பாதித்திருந்த நிலையிலேயே ஊரடங்கை கொண்டு வந்து விட்டார்கள். இது உண்மையிலேயே தொலைநோக்கு பார்வையுடன் கூடிய நல்ல முடிவு.

ஏனென்றால் கொரோனா வைரஸ் என்ற எதிரியின் இயல்பை புரிந்துகொள்ள ஒட்டுமொத்த நாட்டுக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

நமக்கு மத்தியிலேயே ஒரு வைரஸ் இருக்கிறது என்பதை மக்கள் உணர்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த வைரஸ் பரவுவதை தடுப்பதற்கும், இதற்கான ஆஸ்பத்திரிகளை வரிசைப்படுத்துவதற்கும் கால அவகாசம் கிடைத்திருக்கிறது.

நிச்சயமாக ஊரடங்கு பற்றி நிறைய விவாதங்கள் இருக்கின்றன. விமர்சனங்கள் இருக்கின்றன. தவிர்க்க முடியாததாக இருக்கிறது. நிறைய விரக்தி உள்ளது. இந்த வழியில் வாழ்க்கையில் இடையூறுகள் ஏற்படுகின்றன என்ற கோபம் இருக்கிறது. ஆனால், இது மிகமிக வருத்தம் அளிப்பதாக இருக்கிறது.

இந்த ஊரடங்கு நடவடிக்கை, நிச்சயம் அரசாங்கத்தின் துணிச்சல்தான். நேர்மையுடன் இந்த நடவடிக்கையை எடுத்து, இந்த பெரிய அளவிலான பொது விவாதத்தை ஏற்படுத்தி, விரக்திகளை வெளியே வர வைத்து, கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கை சீர்குலைகிறது என்ற நிலையிலும், ஏற்க வைத்திருக்கிறார்கள்.

தினக்கூலியில் வாழ்ந்து வந்த ஏழை மக்கள், ஊரடங்கால் மிகப்பெரிய தியாகம் செய்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் 3 அல்லது 4 வாரங்கள் காத்திருந்து வைரஸ் பரவுவதை பார்த்திருந்து எதிர் நடவடிக்கையை தொடங்காமல், முன்கூட்டியே அதைச் செய்தது மிகவும் துணிச்சலானது.

இதில் ஐரோப்பா, அமெரிக்கா என்று ஒப்பிட்டுப் பார்ப்பது சரியாக இருக்காது. ஆனால் ஆரம்பத்தில் இந்த வகையிலான தடுப்பு நடவடிக்கை எடுக்காத நாடுகள் இருந்தன என்பதை என்னால் சொல்ல முடியும்,

ஆனால் இப்போது அங்கெல்லாம் மிகப்பெரிய கஷ்டங்களுடன் போராடுகிற நிலை வந்துவிட்டதை நான் பார்க்கிறேன். போதுமான சுகாதாரப் பணியாளர்கள் இல்லை. இதனால் தொற்று ஏற்படுகிறது. இப்போது நீண்ட கால ஊரடங்கு பற்றி பேசப்படுவதை பார்க்க முடிகிறது. 6 வார, 8 வார ஊரடங்கு பற்றியெல்லாம் பேசப்படுகிறது.

இப்போது இந்தியாவில் 3 வார ஊரடங்கு போதுமானதா? என்ற கேள்வி எழலாம்.

சமூக அளவிலான அடிப்படை பொது சுகாதார சேவைகள், ஆஸ்பத்திரிகள் எப்படி இருக்கின்றன என்பதை பொறுத்தே அது அமைகிறது. சமூகம் முழுவதும் ஒன்றுபட்டு நின்று போராட வேண்டிய ஒரு போராக இது பார்க்கப்படுகிறதா என்பதை அறிய வேண்டியதிருக்கிறது. களத்தில் என்ன நடக்கிறது என்பது தெரியாமல் இதில் நான் எந்த பரிந்துரையும் செய்ய இயலாது.

ஊரடங்கு உத்தரவு விலக்கிக்கொள்ளப்படுகிறபோது, இனி வீழ்ச்சி ஏற்படாது, நிறைய பேருக்கு இனி கொரோனா வைரஸ் பாதிக்காது, ஆஸ்பத்திரிகள் நோயாளிகளால் மூழ்கிப்போகாது; தேசிய அளவில் நெருக்கடி வராது என்பதை உறுதி செய்வதில் மிகமிக கவனமாக இருக்க வேண்டும்.

இங்கே, மோசமாக பாதிக்கப்பட்ட மக்களைப்பற்றி சொல்ல வேண்டும். அவர்களை காப்பாற்ற வேண்டும். நமது ஆஸ்பத்திரிகளையும் பார்க்க வேண்டும். சுகாதார பணியாளர்கள் முன் வரிசையில் இருந்து சேவையாற்றியதை கருத்தில் கொண்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். நம்மால் முடிந்த அளவுக்கு அவர்களை பாதுகாக்க வேண்டும். சமூகத்தில் அவர்கள் நன்றாக வருவதற்கு நாம் ஆதரவு அளிக்க வேண்டும். அவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்பதை உறுதி செய்ய வேண்டும்.

கொரோனா வைரஸ் பிடியில் இருந்து விரைவாக வெளியே வரவேண்டும் என்றுதான் அரசாங்கங்கள் பெரிய அளவிலான ஊரடங்குகளை அறிவிக்கின்றன. ஆனால் இப்படி ஊரடங்கு போடுகிறபோது அது, மக்களை மிகுந்த வறுமையில் தள்ளிவிடாது, உணவு பற்றாக்குறையை ஏற்படுத்தாது என்பதை உறுதிசெய்து கொள்ள வேண்டும்.

ஊரடங்கை பொறுத்தமட்டில் நாம் மிகவும் கவனமுடன் நிர்வகிக்க வேண்டும் என்ற எண்ணம், உலக நாடுகளில் எல்லாம் ஏற்பட்டிருக்கிறது. ஊரடங்கின் கால அளவு, சில இடங்களில் மிக அதிகமாகவே இருக்கிறது. இப்படிப்பட்ட தருணத்தில், ஊரடங்கை நிர்வகிப்பதும், சமூக மற்றும் பொருளாதார விளைவுகளை கையாள்வதும் மிக முக்கியம். இதில் ஒருங்கிணைந்த கொள்கையை அரசாங்கங்கள் வைத்திருக்க வேண்டும்.

எனக்கு தெரிந்தவரையில் 70 நாடுகளும், பிரதேசங்களும் ஊரடங்கை கொண்டு வந்துள்ளன. அப்படி பார்க்கிறபோது, உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் அல்லது பாதி அளவினர் ஊரடங்கின் கீழ் உள்ளனர். எனவே கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதில் ஊரடங்கு நிர்வாகம் என்பது ஒரு முக்கியமான செயல்பாடு ஆகும்.

கொரோனா வைரஸ் போய்விடுமா அல்லது புளூ வைரஸ் மாதிரி மீண்டும் வருமா என்றால், இந்த வைரஸ் காலப்போக்கில் எவ்வாறு செயல்படும், அதன் தீவிரம் குறைந்துவிடுமா, ஒரு குறிப்பிட்ட வினியோக மாதிரியை கொண்டிருக்குமா என்பதெல்லாம் இப்போது தெரியாது.

இந்த வைரஸ் வந்து 4 மாதங்கள்தான் ஆகிறது. எங்கள் அறிவுக்கேற்ப காலப்போக்கில் நாங்கள் கற்கிறோம். வெப்பமான கால நிலையில் அது என்ன செய்யும் என்பது தெரியாது. இதில் இந்தியாவிடம் இருந்ததான் நான் தகவலை எதிர்பார்க்கிறேன். இந்தியாவில்தான் கோடை காலம். இந்த கோடை காலத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதே அளவில்தான் இருக்குமா, மிதமான காலத்தின்போது பார்த்த அதே அளவுக்கு நோயின் தீவிரம் இருக்குமா என்பதை அறிய வேண்டும்.

கோடை காலத்தில் இந்த வைரஸ் கடுமையாக இருக்காது, பருவநிலை நமக்கு சாதகமாக இருக்கும் என்றே நான் நம்புகிறேன்.

கொரோனா வைரசை பொறுத்தமட்டில் திடீரென மறைந்து விடும் என்பதற்கும் எந்த ஆதாரமும் இல்லை.

- இதுதான் டாக்டர் டேவிட் நபரோவின் பார்வையாக இருக்கிறது. ஆக, கொரோனா வைரசுக்கு முடிவு கட்டி விட வேண்டும் என்று விஞ்ஞானிகளும், மருத்துவ அறிஞர்களும் என்னதான் மாய்ந்து மாய்ந்து போராடினாலும், அது சாத்தியம்தானா என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும்.

ஊரடங்கு முடிந்தாலும், நம்மை பாதுகாத்துக்கொள்வது நமது கையிலும் இருக்கத்தான் செய்கிறது. சுத்தம், சுகாதாரம், நல்ல ஆரோக்கியம், மரியாதைக்குரிய இடைவெளி ஆகிய நான்கையும் எப்போதும் தாரக மந்திரமாக கொண்டு, பின்பற்றுகிறபோது எதிர்வரும் காலங்களை நாம் கடந்து செல்வது கடினமாக இராது!
Tags:    

Similar News