செய்திகள்
சிதம்பரம் - பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் வீடியோ செய்தி, ஏமாற்றம் அளிக்கிறது - ப.சிதம்பரம் கருத்து

Published On 2020-04-04 03:24 GMT   |   Update On 2020-04-04 03:24 GMT
பிரதமர் நரேந்திர மோடியின் வீடியோ செய்தி ஏமாற்றம் அளிப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

கொரோனா வைரஸ் என்ற கண்ணுக்குத் தெரியாத எதிரியை எதிர்த்து போரிட்டு வீழ்த்துவதற்காக நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி வெளியிட்டார்.

அதைத் தொடர்ந்து 25-ந்தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. ஊரடங்கின் 10-வது நாளான நேற்று பிரதமர் மோடி, ஒரு வீடியோ செய்தியை வெளியிட்டார்.

அதில் அவர், கொரோனா வைரசுக்கு எதிராக ஒன்றுபட்டு, ஊரடங்கை கடைப்பிடித்து வருகிற நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

அத்துடன், கொரோனா வைரசுக்கு எதிராக நாம் யாரும் தனியாக இல்லை என்பதை காட்டும் வகையிலும், நாட்டின் 130 கோடி இந்தியர்களும் ஒன்றுபட்டுள்ளோம் என்ற பலத்தை தெரிவிக்கும் வகையிலும் 5-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின் விளக்குகளை அணைத்து விடுங்கள், வீட்டின் 4 மூலைகளிலும் அகல் விளக்கு அல்லது டார்ச் விளக்கு அல்லது செல்போன் விளக்கு அல்லது மெழுகுவர்த்தி ஏற்றுவோம் என்று அழைப்பு விடுத்தார்.

இதை விமர்சித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் டுவிட்டரில் பதிவுகளை வெளியிட்டுள்ளார். அவற்றில் அவர் கூறி இருப்பதாவது:-

அன்புள்ள பிரதமர் நரேந்திர மோடி அவர்களே...

நீங்கள் சொல்வதை கேட்போம். 5-ந்தேதி தீபம் ஏற்றுவோம்.

ஆனால் பதிலுக்கு நாங்கள் சொல்வதையும், தொற்றுநோயியல் துறை வல்லுனர்கள், பொருளாதார வல்லுனர்கள் கூறுகிற புத்தி சாலித்தனமான ஆலோசனைகளுக்கும் நீங்கள் செவிகொடுங்கள்.

இன்று (நேற்று) நாங்கள் உங்களிடம் இருந்து எதிர்பார்த்தது, இரண்டாவது நிதி உதவி திட்டம்தான். இது கடந்த 25-ந்தேதி நிதி மந்திரி நிர்மலா சீதாராமனால் முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட ஏழைகள் உள்ளிட்ட ஏழை, எளிய மக்களுக்கான தாராளமான வாழ்வாதார தொகுப்பாக அமையும் என்று எதிர்பார்த்தோம்.

உழைக்கிற ஒவ்வொரு ஆணும், பெண்ணும், தொழில் அதிபர்கள் முதல் தினக்கூலி தொழிலாளர்கள்வரையில் அனைவரும் பொருளாதார சரிவை தடுத்து நிறுத்துவதற்கும், பொருளாதார வளர்ச்சிக்கான என்ஜின்களை மீண்டும் இயக்குவதற்குமான நடவடிக்கைகளையும்தான் எதிர்பார்த்தார்கள். இரண்டு விஷயங்களிலும் ஏமாற்றம்தான் கிடைத்துள்ளது.

ஒன்றை அடையாளப்படுத்துவது முக்கியம்தான். ஆனால் அடுத்து என்ன செய்யப்போகிறோம் என்ற கருத்துக்கு தீவிரமான சிந்தனையும், நடவடிக்கையும் சம அளவில் முக்கியம்.

இவ்வாறு ப.சிதம்பரம் கூறி உள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மற்றொரு மூத்த தலைவரான முன்னாள் மத்திய மந்திரி சசி தரூரும் பிரதமர் மோடியை சாடி டுவிட்டரில் பதிவுகளை வெளியிட்டுள்ளார்.

அவற்றில் அவர், “பிரதம ஷோமேன் (காட்சிப்படுத்துவதில் ஆர்வம் உள்ளவர்) சொல்வதைக் கேட்டோம். மக்களின் வலியை எவ்வாறு குறைப்பது, மக்களின் சுமைகளை எப்படி குறைப்பது, நிதி பற்றிய கவலைகளை எப்படி போக்குவது என்பது பற்றி எதுவும் இல்லை” என கூறி உள்ளார்.

மேலும், “எதிர்காலத்தைப் பற்றிய பார்வை இல்லை அல்லது ஊரடங்கு விலக்குதலுக்கு பின்னான காலத்தை எதிர்கொள்வது பற்றிய பார்வையும் இல்லை. இந்தியாவின் புகைப்பட செயலி பிரதமர், நல்லதொரு தருணம் என்ற உணர்வை மட்டுமே ஏற்படுத்தி உள்ளார்” எனவும் கூறி உள்ளார்.

Tags:    

Similar News