செய்திகள்
செவிலியர்களிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட நபர்கள் வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்

மருத்துவமனை செவிலியர்களிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட தப்லிகி ஜமாத் பங்கேற்பாளர்கள்

Published On 2020-04-02 23:29 GMT   |   Update On 2020-04-02 23:29 GMT
தப்லிகி ஜமாத் கூட்டத்தில் பங்கேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் செவிலியர்களிடம் அநாகரீகமாக நடந்து கொண்டதால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் (நிஜாமுதீன் மர்காஸ்) தப்லிகி ஜமாத் என்ற இஸ்லாமிய மத அமைப்பு சார்பில் இஸ்லாமிய மத குருக்கள் பங்கேற்ற கூட்டம் கடந்த மாதம் நடைபெற்றது. 

அதில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல் வெளிநாட்டுகளை சேர்ந்த இஸ்லாமியர்களும் பங்கேற்றனர்.

இதற்கிடையில், அந்த கூட்டத்தில் பங்கேற்றவர்கள் பலருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அவர்களில் பலர் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பிய நிலையில் அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

தப்லிகி ஜமாத் கூட்டத்தில் பங்கேற்ற பின்னரும் மசூதியிலேயே இருந்த பலரை டெல்லி போலீசார் கண்டுபிடித்து கொரோனா பரிசோதனைக்காக பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதித்துள்ளனர். 

இந்நிலையில், நிஜாமுதீன் தப்லிகி ஜமாத் கூட்டத்தில் பங்கேற்றவர்களில் 6 பேர் டெல்லி காசியாபாத் பகுதியில் உள்ள எம்.எம்.ஜி. மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட கொரோனா சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு மருத்துவமனை செவிலியர்கள் சிகிச்சை அளித்துவந்தனர். 

ஆனால், தனிமைப்படுத்தப்பட்ட சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 6 பேரும் நேற்று அங்கு பணியில் இருந்து செவிலியர்களை மோசமான வார்த்தைகளால் திட்டியும், மருத்துவமனை வளாகத்திற்குள் ஆடைகள் இன்றி நிர்வாணமாக உலாவியும் அநாகரீகமாக நடந்து கொண்டனர்.

இந்த நாகரீகமற்ற செயலையடுத்து மருத்துவமனை நிர்வாக சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. 

இதையடுத்து, செவிலியர்களிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட  நிஜாமுதீன் கூட்டத்தில் பங்கேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

இந்த சம்பவத்தை தொடர்ந்து நிஜாமூதின் பங்கேற்பாளர்கள் 6 பேரும் எம்.எம்.ஜி. மருத்துவமனையில் இருந்து வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.   
Tags:    

Similar News