செய்திகள்
காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி

தேசிய கிராமப்புற வேலை திட்டத்தில் கூலியை முன்கூட்டியே கொடுக்க பிரதமர் மோடிக்கு, சோனியா கோரிக்கை

Published On 2020-04-02 13:08 GMT   |   Update On 2020-04-02 13:08 GMT
மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டத்தில் 21 நாள் கூலியை முன்கூட்டியே வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்து சோனியா காந்தி கடிதம் எழுதி உள்ளார்.
புதுடெல்லி:

பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி நேற்று ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டம் தொடங்கிய நாள் முதல், கிராமப்புற ஏழைகளுக்கு முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது.

முக்கியமான அறுவடை காலத்தில் லட்சக்கணக்கான விவசாய கூலித்தொழிலாளர்கள் வேலையின்றி விடப்பட்டுள்ளனர். மாற்று வருமான ஆதாரம் இல்லாமல், மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைத்திட்டத்தில் வேலைவாய்ப்பினை எதிர்ப்பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.



ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டிய சூழலில் எந்த வேலை வாய்ப்புக்கும் சாத்தியமில்லாத நிலை உள்ளது. மேலும், வேலை கிடைத்து தொடங்கினாலும் கூட, மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை திட்டத்தில் கூலிக்காக ஒரு மாதத்துக்கும் அதிகமாக காத்திருக்க வேண்டியதிருக்கிறது.

எனவே கிராமப்புற ஏழைகளுக்கு, வருமான ஆதரவு காட்ட வேண்டிய அவசரமான சூழலில், மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டத்தில் பதிவு செய்து கொண்டு வேலை பார்ப்பதில் தீவிரம் காட்டுகிறவர்களுக்கு 21 நாள் கூலியை முன் கூட்டியே வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டுகிறேன். மீண்டும் வேலை வழங்குகிறபோது, இந்த கூலியை சரிக்கட்டிக்கொள்ளலாம்.

இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம் நாட்டில் உள்ள 8 கோடி கிராமப்புற ஏழைகளுக்கு ஆதரவு காட்டுங்கள்.

இவ்வாறு அதில் சோனியா காந்தி கூறி உள்ளார்.

இதற்கிடையே கொரோனா வைரஸ் தடுப்பு நிதிக்கு ‘பி.எம்.கேர்ஸ் நிதி’ என்று பெயர் சூட்டி இருப்பது அப்பட்டமான சுய விளம்பரம் தேடும் முயற்சி என்று காங்கிரஸ் மூத்த தலைவர் பிரிதிவிராஜ் சவான் சாடி உள்ளார்.

இதையொட்டி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், சுய விளம்பரம் தேடிக்கொள்ளும் எந்த வாய்ப்பையும் பிரதமர் தவற விட மாட்டார் என்று விமர்சித்து உள்ளார்.
Tags:    

Similar News