செய்திகள்
முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம்

சேமிப்பு திட்ட வட்டி குறைப்புக்கு ப.சிதம்பரம் கடும் கண்டனம்

Published On 2020-04-02 11:00 GMT   |   Update On 2020-04-02 11:00 GMT
சேமிப்பு திட்டங்களின் வட்டி குறைக்கப்பட்டதற்கு மத்திய அரசை ப.சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார்.
புதுடெல்லி:

பொது வருங்கால வைப்பு நிதி, தேசிய சேமிப்பு திட்டம், கிசான் விகாஸ் பத்திரம் போன்ற பல்வேறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு குறைத்துள்ளது.

இந்நிலையில், இதை கடுமையாக விமர்சித்து முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் நேற்று ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

இந்த மத்திய அரசு, சில நேரங்களில் முட்டாள்தனமான யோசனை அடிப்படையில் செயல்படக்கூடியது என்பது எனக்கு தெரியும். ஆனால், சேமிப்பு வட்டி குறைப்பு என்பது எவ்வளவு முட்டாள்தனமான யோசனை என்பதை நினைக்கும்போது எனக்கு வியப்பாக இருக்கிறது.

இது சாதுரியமான முடிவாக இருக்கலாம். ஆனால், இதை செயல்படுத்துவதற்கு இது முற்றிலும் தவறான நேரம்.

வருமானம் குறித்த நிச்சயமற்ற நிலைமையிலும், துயரத்திலும் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இந்த சேமிப்பு திட்டங்களில் கிடைக்கும் வட்டி வருவாயை நம்பியே இருக்கிறார்கள்.

எனவே, மத்திய அரசு உடனடியாக இதை மறுபரிசீலனை செய்து, ஜூன் 30-ந் தேதிவரை பழைய வட்டி விகிதங்களை அளிக்க வேண்டும்.கடந்த நிதியாண்டின் முதல் 3 காலாண்டுகளில் வளர்ச்சி விகிதம் முறையே 5.6 சதவீதம், 5.1 சதவீதம், 4.7 சதவீதம் என்று இருந்தது. 4-வது காலாண்டு, 31-ந் தேதிதான் முடிவடைந்தது. 4-வது காலாண்டின் வளர்ச்சி விகிதம் 4 சதவீதத்துக்கு மேல் இருக்காது.

எனவே, கடந்த நிதியாண்டின் வருடாந்திர மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 4.8 சதவீதம்தான் இருக்கும். இது, ஏமாற்றம் அளிக்கக்கூடியது.

இந்த நேரத்தில், நாம் வளர்ச்சியை பற்றி கவலைப்படக்கூடாது என்பது எனது கருத்து. சேமிக்கும் மக்களின் வாழ்க்கை மீதுதான் நமது கவனம் இருக்க வேண்டும்.

அதனால்தான், கடந்த 25-ந் தேதி அறிவிக்கப்பட்ட நிதிஉதவி திட்டம்போல், மற்றொரு நிதிஉதவி திட்டம் அறிவிக்கப்பட வேண்டும் என்று நான் சொல்லி வருகிறேன்.

இவ்வாறு ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
Tags:    

Similar News