செய்திகள்
பிரதமருடன் நடந்த ஆலோசனையில் பங்கேற்ற தமிழக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள்

ஊரடங்கை அமல்படுத்துவதில் மாநில அரசுகள் கண்டிப்பாக இருக்கவேண்டும்- மோடி அறிவுறுத்தல்

Published On 2020-04-02 09:43 GMT   |   Update On 2020-04-02 09:43 GMT
ஊரடங்கை அமல்படுத்துவதில் மாநில அரசுகள் கண்டிப்பாக இருக்கவேண்டும் என மாநில முதல்வர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.
புதுடெல்லி:

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். உள்துறை மந்திரி அமித் ஷா, சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ வர்தன் ஆகியோரும் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர். 

தமிழகம் சார்பில் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலமாக ஆலோசனையில் பங்கேற்றார். சுகாதாரத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் ஆகியோரும் பங்கேற்றனர்.



கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள சவால்கள், மக்களிடையே மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்தி கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது, பாதிக்கப்பட்டோருக்கான மருத்துவ வசதிகளை அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கொரோனா தடுப்பு பணிக்காக பிறப்பிக்கப்பட்டுள்ள நாடு தழுவிய ஊரடங்கை அமல்படுத்துவதில் மாநில அரசுகள் கண்டிப்பாக இருக்கவேண்டும் என மாநில முதல்வர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தினார். 

மேலும், அத்தியாவசிய பொருட்கள் பொது மக்களை சென்றடைய தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும், நிதி உதவியை உறுதி செய்வதுடன் சமூக இடைவெளியை மாநில அரசுகள் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் மோடி வலியுறுத்தினார்.
Tags:    

Similar News