செய்திகள்
அரவிந்த் கெஜ்ரிவால்

டாக்டர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்களுக்கு ரூ.1 கோடி - கெஜ்ரிவால் அறிவிப்பு

Published On 2020-04-01 14:09 GMT   |   Update On 2020-04-01 14:09 GMT
கொரோனா பாதிப்பு அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும்போது இறக்கும் சுகாதார பணியாளர்களுக்கு ரூ.1 கோடி வழங்கப்படும் என டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
புதுடெல்லி: 

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இந்தியா முழுவதும் 38 பேர் பலியாகி உள்ளனர்.  வைரசால்  பாதிப்பு அடைந்தோரின் எண்ணிக்கை இன்று 1,600 -ஐ தாண்டியுள்ளது.  132 பேர் சிகிச்சை முடிந்து திரும்பியுள்ளனர்.

இந்நிலையில்,  கொரோனா பாதிப்பு அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும்போது இறக்கும்  சுகாதார பணியாளர்களுக்கு ரூ.1 கோடி வழங்கப்படும் என டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அரவிந்த்  கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

போரின் போது, ஒவ்வொரு ராணுவ வீரரும் நாட்டைப் பாதுகாக்க தங்களது வாழ்க்கையை பணயம் வைப்பார்கள். அவர்களுக்கு ஒட்டுமொத்த தேசமும் கடன்பட்டிருக்கும். இன்று, சுகாதார பணியாளர்களின் பணியும், ராணுவ வீரர்களின் பணிக்கு குறைந்தது அல்ல. நாட்டு மக்களைப் பாதுகாக்க உங்களின் வாழ்க்கையை பணயம் வைத்துள்ளீர்கள்.

நாட்டை பாதுகாக்கும் ராணுவ வீரர்கள் உயிரிழந்தால், அவர்களது குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி நிதி வழங்கப்படும் என ஏற்கனவே டெல்லி அரசு தெரிவித்துள்ளது.

எதிர்பாராத விதமாக எந்த சுகாதார பணியாளர்களாவது, அவர்கள் டாக்டர்கள், நர்சுகள், தூய்மை பணியாளர்கள் என யாராக இருந்தாலும் சரி, கொரோனா வைரசுக்கு எதிரான போரின்போது உயிரிழந்தால், அவர்களின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்படும். அவர்கள் அரசு அல்லது தனியார் மருத்துவமனைகளில் பணிபுரிந்தாலும் சரி அவர்களுக்கு இது பொருந்தும்என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News