செய்திகள்
உள்துறை மந்திரி அனில் தேஷ்முக்

முட்டாள்கள் தினத்தில் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை - அனில் தேஷ்முக் எச்சரிக்கை

Published On 2020-03-31 11:38 GMT   |   Update On 2020-03-31 11:38 GMT
முட்டாள்கள் தினத்தில் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மகாராஷ்டிரா மாநில உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் தெரிவித்துள்ளார்.
மும்பை:

சீனாவில் தோன்றிய கொரோனா வைரசால் உலகம் முழுவதும் கடும் பாதிப்பு அடைந்து வருகிறது. இதனால் அனைத்து நாடுகளும் கொரோனா வைரசில் இருந்து காத்துக்கொள்ள ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளன.

இந்தியாவிலும் 21 நாள் ஊரடங்கு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசால் 1,071 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். நாட்டிலேயயே மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம், கேரளா மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் வசிக்கும் பிற மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் இந்த ஊரடங்கு உத்தரவால் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். போக்குவரத்தும் இன்றி, சொந்த ஊருக்கும் திரும்ப முடியாமல் அவர்கள் தவித்து வருகின்றனர்.

இதற்கிடையே, ஊரடங்கு உத்தரவை மீறி சில மாநிலங்களில் உள்ள வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்கிறார்கள். ஒரே நேரத்தில் ஏராளமானோர் செல்வதால் அவர்களுக்கும், அவர்களால் மற்றவர்களுக்கும் கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து ஏற்பட்டு உள்ளது.

இந்நிலையில், முட்டாள்கள் தினத்தில் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மகாராஷ்டிரா மாநில உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை மந்திரி அனில் தேஷ்முக், பிற மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் மும்பையை விட்டு வெளியேறக் கூடாது. அவர்களுக்கு வேண்டிய உணவு, புகலிடம் ஆகியவற்றுக்கு போதிய ஏற்பாடுகளை நாங்கள் செய்துள்ளோம். மகாராஷ்டிராவில் இருந்து செல்ல வேண்டிய தேவை இல்லை.  அவர்கள் இங்கேயே தங்க வேண்டும்.

மேலும், நாளை ஏப்ரல் 1-ம் தேதி, முட்டாள்கள் தினம். இந்த சூழ்நிலையில் வதந்திகள் மற்றும் தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என ஒவ்வொருவரிடமும் நான் கேட்டுக் கொள்கிறேன். அப்படியும் மீறி வதந்தி பரப்பும் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Tags:    

Similar News