செய்திகள்
மசூதியில் இருந்து வரும் நபர்கள்

டெல்லி: 2 ஆயிரம் பேர் பங்கேற்ற மத நிகழ்ச்சியில் 200 பேருக்கு கொரோனா அறிகுறிகள்... அதிர்ச்சி தகவல்

Published On 2020-03-30 23:56 GMT   |   Update On 2020-03-30 23:56 GMT
டெல்லியில் 2 ஆயிரம் பேர் பங்கேற்ற மத நிகழ்ச்சியில் 200 பேருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 250-ஐ கடந்துள்ளது. மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையில், தலைநகர் டெல்லியின் நிசாமுதின் பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் கடந்த 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை இஸ்லாமிய மத குருக்கள் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது. 

அதில் தமிழகம், தெலுங்கானா, காஷ்மீர் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.

வங்காளதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், மலேசியா, சவுதி அரேபியா, தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த 200-க்கும் அதிகமான வெளிநாட்டினரும் பங்கேற்றனர். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் பலர் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பியுள்ளனர். 

இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற மத நிகழ்ச்சியில் பங்கேற்ற நபர்களில் பலருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர்களிடமிருந்து இந்த வைரஸ் பரவியுள்ளது. பின்னர் அவரிடம் இருந்து பலருக்கும் வைரஸ் பரவியிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

இதற்கிடையே, இஸ்லாமிய மத நிகழ்ச்சியில் பங்கேற்று காஷ்மீர் திரும்பிய நபர் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளார். அதேபோல், மத நிகழ்ச்சியில் பங்கேற்று தெலுங்கானா திரும்பியவர்களில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில முதல்மந்திரியின் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் இருந்தும் பலர் டெல்லி மத நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். அவர்களது தகவல்களை திரட்டும் பணி தீவிரமாக நடைபெற்றுவருவதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மத நிகழ்ச்சிகள் முடிந்த பின்னரும் மசூதிக்குள் தங்கியிருந்த 200-க்கும் அதிகமானோர் இருமல், காய்ச்சல், ஜலதோஷம் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் டெல்லியில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் நேற்று அனுமதிக்கப்பட்டனர். 



இதையடுத்து, மசூதிக்குள் இருந்த அனைவரையும் அங்கிருந்து போலீசார் அப்புறப்படுத்தி கொரோனா பரிசோதனைக்க்கு உள்படுத்தியுள்ளனர். 

பரிசோதனை முடிவுகள் இன்று அறிவிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மசூதி இருந்த பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டு போலீசாரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. 

இதற்கிடையே, இஸ்லாமிய மத நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த ஒருங்கிணைப்பாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய டெல்லி முதல்மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். 

முன்னதாக நிஜாமுதின் பகுதியை சேர்ந்த 6 பேருக்கு ஏற்கனவே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்படத்தக்கது.

மத நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் பலருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதால் நிலைமையை சமாளிக்க ஜவகர்லால் நேரு விளையாட்டு அரங்கை கொரோனா சிறப்பு வார்டாக மாற்ற திட்டமிட்டுள்ளதாக டெல்லி அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.       
Tags:    

Similar News