செய்திகள்
வாட்ஸ்அப் பயன்பாடு (மாதிரி படம்)

கொரோனா குறித்து வாட்ஸ்அப் குரூப்பில் வதந்தி பரப்பிய பெண் கைது

Published On 2020-03-30 10:22 GMT   |   Update On 2020-03-30 10:22 GMT
மேற்கு வங்கத்தில் கொரோனா குறித்து வாட்ஸ்அப் குரூப்பில் வதந்தி பரப்பிய பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொல்கத்தா:

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. வைரசை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. வைரஸ் பாதிப்பு குறித்த தகவல்களை சுகாதாரத்துறை புள்ளிவிவரங்களுடன்  வெளியிட்டு வருகிறது. 

அதேசமயம், மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தும் வகையில் போலியான தகவல்களும், சமூக வலைத்தளங்கள் மூலம் உலா வருகின்றன. இதனை போலீசார் திவிரமாக கண்காணித்து, வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அவ்வகையில், மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் கொரோனா குறித்து போலியான தகவலை வெளியிட்டதாக 30 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘கொல்கத்தாவின் நியூ அலிபூர் பகுதியில் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், மாநில அரசாங்கம் தகவல்களை மறைப்பதாகவும் அந்தப் பெண் வாட்ஸ்அப் குரூப்பில் பதிவிட்டுள்ளார். இந்த தகவலை பார்த்த சிலர்  நியூ அலிபூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்றார்.

மேலும், அந்த தகவலை வாட்ஸ்அப் குரூப்பில் இருந்து நீக்கும்படி அட்மினுக்கு காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
Tags:    

Similar News