செய்திகள்
அரவிந்த் கெஜ்ரிவால்

‘எங்கே இருக்கிறீர்களோ அங்கேயே இருங்கள்’என்பதே பிரதமரின் ஊரடங்கு ‘மந்திரம்’: கெஜ்ரிவால் மக்களுக்கு அறிவுரை

Published On 2020-03-29 14:30 GMT   |   Update On 2020-03-29 14:30 GMT
‘நீங்கள் எங்கே இருக்கிறீர்களோ அங்கேயே இருங்கள்’ என்பதே பிரதமர் மோடியின் ஊரடங்கு உத்தரவின் ‘மந்திரம்’ என டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரசின் வீரியத்தை கட்டுப்படுத்த வேண்டுமென்றால் மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என்பதுதான் ஒரே வழி என மத்திய அரசு நினைத்தது. இதனால் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றும்போது 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார்.

பெரும்பாலான மக்கள் வீட்டிற்குள்ளே இருக்க ஆரம்பித்தனர். ஆனால் சிலர் வெளியே நடமாட ஆரம்பித்தனர். அவர்களை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில்தான் நேற்றிலிருந்து வேறு மாநிலத்தில் வேலை பார்க்கும் கூலித் தொழிலாளர்கள் தங்கள் மாநிலத்திற்கு திரும்ப தொடங்கினர். டெல்லியில் ஒரு பேருந்து நிலையத்தில் ஆயிரக்கணக்கான கூலித் தொழிலாளர்கள் கூடியதால் அரசுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

இந்த பயணத்தை தடுக்க வேண்டும் என உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளை கேட்டுக்கொண்டுள்ளது. இந்நி்லையில் மக்கள் வெளியே வரக்கூடாது என்று டெல்லி மாநில முதலமைச்சர் கெஜ்ரிவால் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து கெஜ்ரிவால் கூறுகையில் ‘‘நேற்று ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே இடத்தில் கூடியிருந்த படத்தை பார்த்தேன். நீங்கள் கூட்டமாக ஒரு இடத்தில் நிற்கும்போது, அதில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருந்தால் கூட, நீங்கள் எல்லோரும் பாதிப்படைவீர்கள். உங்களுடைய உயிர் மற்றும் குடும்பத்தை பற்றி யோசித்து பாருங்கள்.

மோடி ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்கும்போது ‘‘நீங்கள் எங்கே இருக்கிறீர்களோ அங்கேயே இருங்கள்’’ என்றார். அதுதான் அவரின் ஊரடங்கு உத்தரவின் ‘மந்திரம்’ என்று நி்னைக்கிறேன். நீங்கள் இதை பின்பற்றாவிடில், ஊரடங்கு உத்தரவு வெற்றி பெறாது. கொரோனா வைரசுக்கு எதிரான போரில் நாடு தோல்வியடைந்து விடும்.

நீங்கள் சம்பாதித்திருந்தால், அதை பயன்படுத்துவதற்கான நேரம் இது’’ என்றார்.
Tags:    

Similar News