செய்திகள்
முதல்-மந்திரி பினராய் விஜயன்

மக்களை தோப்புகரணம் போட வைத்த எஸ்பிக்கு முதல்-மந்திரி கண்டனம்

Published On 2020-03-29 08:02 GMT   |   Update On 2020-03-29 08:24 GMT
கேரளாவில் ஊரடங்கை மீறியதற்காக மக்களை தோப்புகரணம் போட வைத்த எஸ்.பி.க்கு முதல்-மந்திரி பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம்:

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த வருகிற 14-ந் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. கேரளாவில் ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்காமல் பொதுமக்கள் பலரும் சாலைகளில் சுற்றி திரிந்தனர். அவர்களை போலீசார் எச்சரித்தும், அறிவுரை கூறியும் திருப்பி அனுப்பினர்.

அதன்பிறகும் ஏராளமானோர் நேற்றும் சாலைகளில் சுற்றியபடி இருந்தனர். அவர்களை போலீசார் கைது செய்ததோடு, அவர்களின் வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

கண்ணூர் மாவட்டத்தில் எஸ்.பி. யதீஷ் சந்திரா சாலையில் சுற்றி திரிந்தவர்கள், அரசின் உத்தரவை மதிக்காமல் கடைகளை திறந்தவர்களுக்கு நூதன தண்டனை வழங்கினார்.

இதில் கடைகளை திறந்து வைத்திருந்த 3 பேரை பிடித்து அவர்களை சாலையில் தோப்புகரணம் போட வைத்தார். இந்த காட்சிகள் வாட்ஸ்-அப்பில் பரவியது. இது உயர் அதிகாரிகள் மற்றும் அரசின் கவனத்திற்கு சென்றது. 

இது பற்றி முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறியதாவது:-

பொதுமக்களுக்கு அறிவுரை கூறி அவர்களை திருப்பி அனுப்ப வேண்டும் என்றே கூறியுள்ளோம். அவர்களுக்கு இதுபோன்ற தண்டனை கொடுப்பது போலீசாருக்கு அழகல்ல.

இது குறித்து உள்துறை செயலாளர் மூலம் சம்பந்தபட்ட அதிகாரியிடம் விளக்கம் கேட்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து கேரள போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத் பெக்ரா கூறும்போது, கண்ணூர் எஸ்.பி. யதீஷ் சந்திராவிடம் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்படும் என்றார்.

எஸ்.பி. யதீஷ் சந்திராவிடம் இது குறித்து கேட்டபோது, ஊரடங்கை மீறவேண்டாம் என்று முதல் 2 நாட்கள் மக்களுக்கு அறிவுரை வழங்கினோம். நேற்று ஊரடங்கை மீறினால் என்ன நடக்கும் என்பதை அறிவுறுத்தவே அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது, என்றார்.

Tags:    

Similar News