செய்திகள்
கோப்பு படம்

கர்நாடகா: 10 மாத குழந்தைக்கு கொரோனா

Published On 2020-03-27 23:41 GMT   |   Update On 2020-03-28 01:52 GMT
கர்நாடகா மாநிலத்தில் 10 மாதமே நிரம்பிய குழந்தைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெங்களுர்:

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் இதுவரை 748 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இந்தியாவில் இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், கர்நாடகா மாநிலம் தக்‌ஷினா கன்னடா மாவட்டம் பென்ட்வால் தாலுகா சஜ்பநாடு கிராமத்தை சேர்ந்த தம்பதிக்கு 10 மாதம் நிரம்பிய குழந்தை ஒன்று உள்ளது. அந்த குழந்தை கடந்த 23-ம் தேதி அன்று காய்ச்சலால், இருமல் உள்ளிட்ட பிரச்சனைகளால் மிகுந்த அவதியுற்று வந்தது. 

இதனால் பெற்றோர் அந்த குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு குழந்தையின் எச்சில் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையின் முடிவில் பிறந்து 10 மாதங்களே நிரம்பிய அந்த குழந்தைக்கு கொரோனா வைரஸ் பரவி பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனால், குழந்தை உடனடியாக கொரோனா பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறது. தற்போது குழந்தையின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

இதையடுத்து, 10 மாத குழந்தைக்கு யார் மூலம் வைரஸ் பரவியது என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. 

மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குழந்தையின் சொந்த ஊரான சஜ்பநாடு கிராமம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. கிராமத்துக்குள் யாரும் நுழையவும், அங்கிருந்து வெளியே செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.      


Tags:    

Similar News