செய்திகள்
பிரதமர் மோடி, சோனியா காந்தி,

கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆதரவு: மோடிக்கு சோனியாகாந்தி கடிதம்

Published On 2020-03-27 02:53 GMT   |   Update On 2020-03-27 02:53 GMT
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு காங்கிரஸ் முழு ஆதரவு அளிக்கும் எனவும், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு ரூ.7,500 வழங்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு, சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
புதுடெல்லி :

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவருவதால் அதனை தடுக்க மத்திய அரசு நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஏற்கனவே பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் எழுதியிருந்த நிலையில், நேற்று மீண்டும் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் சோனியா காந்தி கூறியிருப்பதாவது:-

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்திருப்பதை வரவேற்கிறோம். இந்த வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக மத்திய அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் காங்கிரஸ் முழு ஆதரவு அளிக்கும்.

நமது நாட்டுக்காகவும், மனிதநேயத்தின் அடிப்படையிலும், உண்மையாகவும் நாம் ஒவ்வொருவரும் நமது கடமையை மதித்து நடந்து கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். நான் சில நடவடிக்கைகளையும் பரிந்துரைக்க விரும்புகிறேன். இவை நாம் சந்திக்க உள்ள பெரிய அளவிலான சுகாதார நெருக்கடியை சமாளிக்க நாட்டுக்கு உதவும் எனவும் நான் நம்புகிறேன்.

முகக்கவசம் போன்ற பாதுகாப்பு கருவிகள் இல்லை என்ற காரணத்தால் ஒரு சுகாதார ஊழியர் கூட கொரோனா வைரசால் பாதிக்கப்படக் கூடாது என்ற அளவுக்கு, சுய பாதுகாப்பு கருவிகள் உற்பத்தி மற்றும் வினியோகத்தை நாம் முதலில் உறுதி செய்ய வேண்டும்.

டாக்டர்கள், நர்சுகள் மற்றும் சுகாதார ஊழியர்கள் அனைவருக்கும் மார்ச் 1-ந் தேதி முதல் 6 மாதங்களுக்கு ‘சிறப்பு இடர் படிகள்’ அறிவிக்கப்பட வேண்டியது முக்கியம். சுகாதார ஊழியர்களும், அவர்களது ஆதரவு குழுக்களும் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு எதிராக முன்னணியில் இருந்து போராடி வருகிறார்கள். அவர்களுக்கு அனைத்து பாதுகாப்பு மற்றும் ஊக்கத்தொகை அளிக்க நாம் கடமைப்பட்டு இருக்கிறோம்.

கடந்த சில வாரங்களாக குறிப்பிட்ட ஆஸ்பத்திரிகள், அவர்களது இருப்பிடம், படுக்கைகளின் எண்ணிக்கை, தனி வார்டுகள், வென்டிலேட்டர் கருவிகள், அர்ப்பணிப்புடன் கூடிய மருத்துவ குழுக்கள், மருந்துகள் இருப்பு போன்றவைகள் பற்றி நிச்சயமற்ற தன்மை உள்ளது.



இதுதொடர்பாக தேவையான தகவல்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். குறிப்பாக குறிப்பிட்ட ஆஸ்பத்திரிகள் எங்கு உள்ளது? அதன் தொலைபேசி எண் என்ன? போன்றவற்றை வெளியிட வேண்டும். இதுபோன்ற அத்தியாவசிய தகவல்கள் எல்லாம் ஒரே தளத்தில் கிடைக்கும் வகையில் ஒரு வலைத்தளத்தை அமைக்க வேண்டும்.

நாடு முழுவதும் பரவலாக அதிக அவசர சிகிச்சை பிரிவுகளுடன் தற்காலிக ஆஸ்பத்திரிகள் கட்டும் பணிகளை மத்திய அரசு உடனே தொடங்க வேண்டும்.

தினக்கூலிகள், ஊரக வேலை உறுதித்திட்ட தொழிலாளர்கள், தொழிற்சாலை ஊழியர்கள், கட்டுமான தொழிலாளர்கள் போன்ற முறைசாரா தொழிலாளர்கள், மீனவர்கள், விவசாய தொழிலாளர்கள் போன்ற பலர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பல வர்த்தக நிறுவனங்கள், கம்பெனிகள் மூடப்பட்டுள்ளதால் தற்காலிக மற்றும் நிரந்தர ஊழியர்கள் பலர் வேலை இழந்துள்ளனர். எனவே மத்திய அரசு உடனடியாக நேரடியாக பணம் வழங்குவது உள்ளிட்ட சமூக பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

ஜன்தன் வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள், முதியோர், விதவைகள், மாற்றுத் திறனாளிகள், ஓய்வூதியம் பெறுவோர் உள்ளிட்ட அடித்தட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களது வங்கி கணக்கில் குறைந்தபட்சம் ரூ.7,500 செலுத்த வேண்டும். அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் 10 கிலோ அரிசி அல்லது கோதுமை வழங்க வேண்டும்.

21 நாட்கள் தடைக்காலம் அறுவடை காலத்தில் வந்துள்ளது. எனவே அறுவடையும், பயிர் கொள்முதலும் உரிய முறையில் நடைபெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாய கடன்களை வசூலிப்பதை 6 மாதங்களுக்கு நிறுத்திவைப்பதுடன், கடனை தள்ளுபடி செய்வது குறித்தும் பரிசீலிக்க வேண்டும்.

வங்கிகள் அனைத்து கடன்கள் மீதான சுலப தவணைகளை 6 மாதங்களுக்கு நிறுத்தி வைக்க வேண்டும். அரசு ஊழியர்கள் வாங்கிய கடனுக்கு சம்பளத்தில் பிடித்தம் செய்யும் தவணையையும் 6 மாதங்களுக்கு நிறுத்தி வைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட சிறு, குறு தொழில்கள், சிறு வியாபாரிகள் போன்றவர்களுக்கு வரி ரத்து, சலுகை போன்ற திட்டங்களை அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு சோனியா காந்தி கூறியுள்ளார்.

Tags:    

Similar News