செய்திகள்
டெல்லி ஐகோர்ட்

கஜகஸ்தானில் தவிக்கும் இந்திய மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய டெல்லி ஐகோர்ட் உத்தரவு

Published On 2020-03-26 10:22 GMT   |   Update On 2020-03-26 10:22 GMT
கஜகஸ்தானில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்படி மத்திய அரசுக்கு டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி:

கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் உலக நாடுகள் திணறி வருகின்றன. பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் விமான போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஏராளமானோர் சொந்த நாடுகளுக்கு திரும்ப முடியாமல் தவிக்கின்றனர். 

இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையால் கஜகஸ்தானில் இருந்து வெளியேற முடியாமல் 23 நாட்களாக தவிக்கும் 300 இந்திய மாணவர்களை மீட்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை வீடியோ கான்பரன்சிங் மூலம் நீதிபதிகள் விசாரித்தனர். அப்போது கஜகஸ்தானின் அல்மாட்டி விமான நிலையத்தில் தவிக்கும் 300 இந்திய மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்படி வெளியுறவுத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மாணவர்களுக்கு உணவு, மருத்துவ பராமரிப்பு, உறைவிடம் மற்றும் போக்குவரத்து தொடர்பாக அடிப்படை வசதிகள் மற்றும் உதவிகளை விரைவாக வழங்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இது தொடர்பாக வெளியுறவுத்துறை மூலமாக மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை 28ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Tags:    

Similar News