செய்திகள்
கோப்புப்படம்

போதுமான உணவு பொருட்கள் கையிருப்பு உள்ளது- இந்திய உணவு கழக தலைவர் தகவல்

Published On 2020-03-25 08:12 GMT   |   Update On 2020-03-25 08:12 GMT
நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துள்ளதால் உணவுப் பொருள் தட்டுப்பாடு வருமோ என்ற அச்சம் பொதுமக்களுக்கு தேவையில்லை என்று இந்திய உணவு கழக தலைவர் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மளிகைக் கடைகள், காய்கறி கடைகள், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் உணவுப் பொருள் தட்டுப்பாடு வருமோ என்ற அச்சம் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது. ஆனால் போதுமான அளவு உணவு தானியம் கையிருப்பில் உள்ளது. இதுதொடர்பாக இந்திய உணவு கழக தலைவர் பிரசாத் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் மக்களுக்கு உணவு தானியங்கள் கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சம் உள்ளது. ஆனால் போதுமான உணவு தானியங்கள் கையிருப்பில் உள்ளது. 2019-2020-ம் நிதி ஆண்டில் இந்தியாவில் உணவு தானிய உற்பத்தி 29.2 கோடி டன்னாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்தியாவின் ஆண்டு தேவையே 5 கோடி முதல் 6 கோடி டன் வரையிலான உணவு தானியங்கள் மட்டுமே.

தற்போது நாட்டில் கைவசம் உள்ள கிடங்குகளில் 10 கோடி டன் உணவு தானியங்கள் உள்ளன. எனவே கோதுமை, அரிசி குறித்து பொதுமக்கள் கவலைப்பட தேவையில்லை.

தேவைப்பட்டால் ரே‌ஷன் கடைகள் மூலம் நாட்டின் அனைத்து பகுதிகளில் உள்ள மக்களுக்கும் உணவு தானியங்களை அளிக்க முடியும். இதற்கான உத்தரவுகளை மத்திய உணவு வினியோகத்துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் பிறப்பித்துள்ளார்.

6 மாதங்களுக்கு அனைத்து மாநிலங்களுக்கும் 3 கோடி டன் கோதுமை, அரிசி தேவை. இதற்கான கையிருப்பும் உள்ளது. வருகிற ஏப்ரல் மாதத்துக்குள் 6.4 கோடி டன் உணவு தானியங்கள் இந்திய உணவு கழகத்துக்கு வந்து சேரும்.

எனவே மாநில அரசுகள் தேவையான உணவு தானியங்களை இந்திய உணவுக்கழக கிடங்கில் இருந்து எளிதாக பெறமுடியும். மேலும் மாநில அரசுகள் கடனாகவும் உணவு தானியங்களை தர முடியும். அரசிடம் நிதி இருப்பு இல்லை என்ற பயமும் வேண்டாம்.

நடப்பு நிதி ஆண்டில் 11.74 கோடி டன் கோதுமை, 10.62 கோடி டன் தானியங்கள் உற்பத்தி நடைபெற்று அவை இந்திய உணவு கழகத்துக்கு கிடைக்கும். மேலும் சீனாவிடம் இருந்தும் நமக்கு உணவு தானியங்கள் வரும். எனவே பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News